
(எம்.மனோசித்ரா)
அண்மையில் மீகாவத்தை பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட 23 கிலோ கிராம் ஹெரோயினுடன் தொடர்புடைய சந்தேக நபராக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
எனினும் தற்போது குறித்த சந்தேகநபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்தியாவுடன் இராஜதந்திர ரீதியில் தொடர்பு கொண்டு அவரை இலங்கைக்கு கொண்டு வந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரை நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னரே அவர் வேறு போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவரா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியும். எனினும் குறித்த சந்தேகநபர் வேறு திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதன் போது, நாட்டிலிருந்து சந்தேக நபரொருவர் தப்பிச் செல்லக் கூடியவாறு பாதுகாப்பு ஸ்திரமற்றதாகியுள்ளதா என்று ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பொலிஸ் பேச்சாளர், 'குறித்தவொரு சந்தேகநபர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமைக்காவோ அல்லது சட்ட விரோதமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்காகவோ நாட்டில் பாதுகாப்பு ஸ்திரமற்றுள்ளது என்று கூற முடியாது பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment