வரி குறைப்பு, சலுகையை அரசாங்கம் வழங்கியுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் : ராஜித்த சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

வரி குறைப்பு, சலுகையை அரசாங்கம் வழங்கியுள்ளதால் இந்த விடயம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் : ராஜித்த சேனாரத்ன

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

இலங்கையில் இனிப்புப் பான உற்பத்திகளுக்கு எவ்வித விஞ்ஞானப்பூர்வமான முன்மொழிவுகளுமின்றி வரி குறைப்பு மற்றும் சலுகையை அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

பாராளுமன்றில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற உற்பத்தி வரிகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இனிப்புப் பான உற்பத்தியை இரண்டு பன்நாட்டு நிறுவனங்களும் இலங்கையில் உள்ள ஒரு நிறுவனமும் மேற்கொள்கின்றன. இனிப்பு பானங்களுக்கு எமது அரசாங்க காலத்தில் விதித்திருந்த வரிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வரவேற்பை பெற்றிருந்தது. 

சாதாரணமாக ஒரு போத்தல் இனிப்பு பானத்தில் 8 தேக்கரண்டி சீனி கலக்கப்படுகிறது. ஒருநாளைக்கு எமது உடம்புக்கு 8 தேக்கரண்டி சீனிதான் அவசியம். இந்த பானத்தை குடித்தால் ஒருநாளைக்குத் தேவையான சீனியின் அளவு எமக்கு கிடைத்துவிடும். 

எமது நாட்டில் தொற்றா நோய்களில் பிரதானமானது நீரிழிவு நோயாகும். நூற்றுக்கு 20 சதவீதமானவர்கள் நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ள நிலையில் இதனை முறியடிக்க நாம் வரிக் கொள்கையொன்றை கொண்டுவந்தோம். 

பழப்பானத் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் இலங்கையர்களாகும். இதுவொரு தேசிய கைத்தொழிலாகும். இவர்கள் சில சலுகைகளை கோரியிருந்தனர். அதனை நாம் கவனத்தில் கொண்டு முழுமையான இனிப்பு பான உற்பத்திகளின் ஒவ்வொரு கிராம் சீனிக்கும் 50 சதம் வரி விதித்தோம். இதனால் இலங்கையில் கொக்காகோலா வீழ்ச்சி கண்டதுடன், அவர்கள் சீனியின் அளவையும் குறைத்தனர். 

பழப்பானங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து இனிப்புப் பானங்களுக்கும் நாம் 50 சதம் வரி விதித்திருந்தோம். இதனால் இனிப்பு பானம் பருகுவதிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. பழங்கள் பானங்களில் 6 கிராம் இயற்கை இனிப்பு உள்ளது. இதற்கு அதிகமாக அதிகரிக்கும் ஒவ்வொரு வீதத்திற்கும் 50 சதம் அதிகரித்தோம். இதுதான் எமது வரிக்கொள்கை. 

ஆனால், இன்று பன்நாட்டு நிறுவனங்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. 50 சதம் வரியை 30 சதமாக குறைத்துள்ளனர். விஞ்ஞானப்பூர்வமான எவ்வித தரவுகளுமின்றி இவ்வாறு சலுகை வழங்கியுள்ளனர். அவர்களிடம் இயற்கை இனிப்பு இல்லை என்பதுடன், 6 தேக்கரண்டியும் செயற்கை இனிப்பாகும். 

இதேவேளை, பழங்களில் தயாரிக்கப்படும் பானங்களுக்கு 9 கிராம் சலுகை வழங்கியுள்ளனர். ஏன் அவ்வளவு அதிகரிப்பு எனத் தெரியவில்லை. 6 வீதம்தான் இருக்க வேண்டும். புகையிலைக்கு எதிரான கொள்கை, மருந்து முகாமைத்துவ கொள்கை என எமது திட்டங்களுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வரவேற்பளித்திருந்தது. 

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலக்குக்கு ஒத்துழைப்பு வழங்கிய 6 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இதனால் இது தொடர்பில் பிரதமர் மீண்டும் சிந்திக்க வேண்டும். உலகில் ஏற்றுக் கொண்டுள்ள இந்த முறைமையை மாற்ற வேண்டாம். பழங்களில் தயாரிக்கும் பானங்களுக்கு மாத்திரம் சலுகை வழங்கி ஏனையவற்றுக்கு சலுகை வழங்க வேண்டாமென கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment