இந்தியாவுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறி இலங்கை அரசாங்கம் செயற்பட முடியாது - சுமந்திரன் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

இந்தியாவுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியை மீறி இலங்கை அரசாங்கம் செயற்பட முடியாது - சுமந்திரன் தெரிவிப்பு


13 ஆவது திருத்த சட்டத்தில் ஆரம்பித்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருக்கிறார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அரசாங்கம் கூறி வருகின்ற நேரத்தில் இந்திய பிரதமரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒரு விடயமாகும். இதனை நாங்கள் வரவேற்கின்றோம் என்று தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, மீண்டும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கிறது. ஆகவே இவற்றை இலங்கை அரசாங்கத்தால் மீறி செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணையவழி ஊடாக நடைபெற்ற இரு தரப்பு பேச்சுவார்த்தையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்குமாறு இந்திய பிரதமர் வலியுறுத்தியது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று முன்தினம் இணையவழி மூலமாக நடைபெற்ற பேச்சு வார்த்தை சம்பந்தமாக ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட மூன்று கூட்டறிக்கைக்கு பின்னர் தற்பொழுதுதான் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு இடைப்பட்ட காலங்களின் எந்தவொரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கவில்லை. முன்னைய கூட்டறிக்கைகளை விட இந்த கூட்டறிக்கையில் என்ன விஷேசம் என்றால் ‘நீதி’ என்ற சொல் முதற்தடவையாக கூறப்பட்டிருக்கிறது. இந்த விடயம் மிக முக்கியமானதொன்று.

இந்நிலையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சு தனியாக ஒரு அறிக்கையை சிங்கள மொழியில் மாத்திரம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் இரு நாடுகளும் (இலங்கை-இந்தியா) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்ட பல விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. இரண்டு நாடுகள் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டால், அதன் பின்னர் தனியாக ஒரு நாடு அறிக்கையை வெளியிடுவதில்லை. ஆனால் இலங்கை அரசாங்கம் அந்த செயற்பாட்டை செய்திருக்கிறது. இதன் மூலம் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெரிகிறது.

13 ஆவது திருத்த சட்டத்தில் ஆரம்பித்து தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருக்கிறார். புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கப் போவதாக அரசாங்கம் கூறி வருகின்ற நேரத்தில் இந்திய பிரதமரின் இந்த அறிவிப்பு மிக முக்கியமான ஒரு விடயமாகும். இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை இந்திய பிரதமர் ஆணித்தரமாக கூறியிருக்கிறார். இதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளியிடப்பட்டிருந்த முன்னைய கூட்டறிக்கைகளிலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்தி, அதற்கு அப்பாலும் சென்று அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதை நாங்கள் வரவேற்கின்றோம். மாகாணத்தை அடிப்படை அலகாக கொண்ட ஒரு அதிகாரப்பகிர்வு முறைதான் 13 இல் இருக்கிறது. வட-கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் போன்றன 13 இல் இருக்கின்றன. எனவே மேற்சொல்லப்பட்ட அடிப்படையில் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு அப்பாலும் சென்று தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் இது மிக மிக வரவேற்கக்கூடிய விடயம்.

எனவே இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றினூடாக இந்த விடயங்களை கூறியிருப்பதனால், இலங்கை அரசாங்கம் இவற்றுக்கு இணங்கியிருக்கிறது. சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறி செயற்பட முடியாது என்பதை நான் பல தடவைகள் கூறியிருக்கின்றேன். அதேபோல் மீண்டும் இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் ஒரு வாக்குறுதியை கொடுத்திருக்கிறது. ஆகவே இவற்றை இலங்கை அரசாங்கத்தால் மீறி செயற்பட முடியாது.

‘தினக்குரல்’ 

No comments:

Post a Comment