இணைந்த நேர அட்டவணைக்கு போக்குவரத்து சபை ஒத்துழைக்கவில்லை - வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

இணைந்த நேர அட்டவணைக்கு போக்குவரத்து சபை ஒத்துழைக்கவில்லை - வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர்

வவுனியாவில் இணைந்த நேர அட்டவணையில் பொதுமக்களிற்கான போக்குவரத்து சேவையினை மேற்கொள்வதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை என வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குற்றம்சாட்டினார். 

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வட மாகாண ஆளுநர் சாள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத் தலைமையில் இன்று இடம்பெற்றது. 

இதன்போது கருத்து தெரிவித்த அவர் வடக்கின் நான்கு மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணை செயற்பாடு வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பேருந்துகளிற்கிடையில் போட்டித்தன்மை ஏற்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிற்கான சரியான சேவையினை வழங்க முடியாதுள்ளது. 

200 மில்லியன் ரூபாய் செலவளித்து அனைத்து வசதிகளுடனும், அமைக்கப்பட்ட பேருந்து நிலையம் இருக்கும் போது அதன் வாசலில் தரித்து நின்று பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றன. இது தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றினை பெறுவதற்கு போக்குவரத்து சபையினர் ஒத்துழைக்கவில்லை, உடனே வேலை நிறுத்தம் செய்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக பல தரப்புகளுடன் கூட்டங்கள் நடாத்தப்பட்டும் உரிய தீர்வினை பெற முடியாதுள்ளதாக அவர் தெரிவித்தார். 

வடக்கில் நான்கு மாவட்டங்களிலும் நடைமுறையில் உள்ள இணைந்த நேர அட்டவணை வவுனியாவில் மாத்திரம் நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பது தொடர்பாக இணைத் தலைவரான ஆளுனர் விசனம் தெரிவித்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிபர் நடவடிக்கை எடுப்பதுடன், பொலிசாரின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்தார். 

இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக பதிலளிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையின் எந்த ஒரு அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை. இது தொடர்பிலும் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களால் விசனம் வெளியிடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad