அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவூட்ட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவூட்ட ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

(நா.தனுஜா) 

ஜனநாயகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தைக் கொண்டுவரல், நாட்டின் சட்டதிட்டங்களையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சவாலுக்கு உட்படுத்தல், தனி நபர் சுதந்திரத்தைக் கேள்விக்குட்படுத்தல் உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டுவதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருக்கிறது. 

இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு இன்று திங்கட்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது ஜனநாயகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தைக் கொண்டுவரல், நாட்டின் சட்ட திட்டங்களையும் பாராளுமன்ற ஜனநாயகத்தையும் சவாலுக்கு உட்படுத்தல், தனி நபர் சுதந்திரத்தைக் கேள்விக்குட்படுத்தல், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தல் மற்றும் சிறையில் அடைத்தல், பொருட்களின் விலைகளில் மட்டுப்பாடுகளைப் பேணாமல் அந்த சுமையை மக்கள் மீது சுமத்துதல், தன்னிச்சையான முறையில் வரி அறவீடுகளை அதிகரித்தல், சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளடங்கலாக தற்போதைய அரசாங்கத்தினால் ஏமாற்று வேலைகள் தொடர்பில் நாட்டு மக்களைத் தெளிவூட்டும் விசேட செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டிருக்கிறது. 

இந்த செயற்திட்டம் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தனவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளது. 

அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய முக்கிய இளைஞர் அமைப்பான தேசிய இளைஞர் முன்னணி, முக்கிய பெண்கள் அமைப்பான லக் வனிதா அமைப்பு மற்றும் புத்திஜீவிகள், கலைஞர்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதுமாத்திரமன்றி தேசிய பிக்குகள் முன்னணியின் ஊடாக நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு நெருக்கடியின் பாரதூரத்தன்மை, பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகள், சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மகா சங்கத் தேரர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான மற்றொரு செயற்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அவசியமான தயார்ப்படுத்தல்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களின் காரணமாக வலுவிழந்திருந்த கட்சியின் தொடர்பு ஊடகப் பிரிவையும் மீண்டும் மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad