விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறவுள்ளேன் - பா. டெனீஸ்வரன் - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறவுள்ளேன் - பா. டெனீஸ்வரன்

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இனத்தின் நலன் கருதி வாபஸ் பெறவுள்ளேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பா. டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வழக்கை வாபஸ் பெறுமாறு பல தரப்பினர்களும் கோரி வருகின்றமை தொடர்பில் இன்று காலை (14.09.2020) அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போதே இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை முதலமைச்சராக இருந்த போது சி.வி. விக்னேஸ்வரன் பதவி விலக்கிய போது எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாத என்னையும் பதவி விலக்கியிருந்தார். இதற்கு நான் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தேன். எந்த குற்றமும் செய்யாத என்னையும் பதவி விலக்கியது எனது தன்மானத்திற்கு பெரும் பாதிப்பாக இருந்தது. 

எனவேதான் நீதி கோரி இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தேன். எனவே இந்த வழக்கின் பிரகாரம் வழங்கிய தீர்ப்பில் நான் வடக்கு மாகாண சபையில் வகித்த அமைச்சுப் பதவியை மீண்டும் எனக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதனை அப்போது முதலமைச்சர் பதவியிலிருந்த விக்கினேஸ்வரன் அவர்கள் செய்யவில்லை. 

இந்த நிலையில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன்போது முன்னாள் முதலமைச்சர் குற்றவாளியாக இனம் காணப்படுவதற்கே அதிக ஏது நிலை காணப்படுகிறது. எனவே அவ்வாறு அவர் குற்றவாளியாக இனம் காணப்பட்டால் சிறைத் தண்டனைக்கு உள்ளாக வேண்டி ஏற்படலாம் இதனை கருத்தில் எடுத்தே பலரும் என்னிடம் வழக்கை வாபஸ்பெறுமாறு கோரி வந்தனர். 

இந்த நிலையில் நான் எதிர்பார்த்த நீதி எனக்கான நியாயம் கிடைத்தமையால் இனத்தின் நலன் கருதி முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை நாளையதினம் (15.09.2020) வாபஸ் பெறவுள்ளேன் எனத் தெரிவித்தார். 

நான் பதிவி விலக்கப்பட்டபோது எனது நியாயத்திற்காக எனக்காக எவரும் குரல் கொடுக்கவில்லை. அப்போது எனது நியாயம் மட்டுமே என்பக்கம் இருந்தது. ஆனால் தற்போது முன்னாள் முதலமைச்சர் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், என பலரும் என்னுடன் தொடர்புகொண்டு வருகின்றனர். எனவே ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் நலன் கருதியே நான் வழக்கை வாபஸ் பெறவுள்ளேன. எனவும் அவர் தெரிவித்தார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad