அரசியல் பழிவாங்கலின் விளைவாகவே மரண தண்டனை கிடைத்தது, பிள்ளையானும் இவ்வாறான அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டுள்ளார் - பிரேமலால் ஜயசேகர - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

அரசியல் பழிவாங்கலின் விளைவாகவே மரண தண்டனை கிடைத்தது, பிள்ளையானும் இவ்வாறான அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டுள்ளார் - பிரேமலால் ஜயசேகர

அரசியல் பழிவாங்கலின் விளைவாகவே இன்று தனக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நாம் மக்கள் மீது கொண்ட அன்பினால்தான், என்னை நாடாளுமன்ற உறுப்பினர்களாக அவர்கள் தெரிவு செய்துள்ளார்கள்.

எமது கைகள் அரசியல் ரீதியாக தூய்மையாகத்தான் உள்ளன. எனக்கு எதிராக அரசியல் பழிவாங்கல் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அப்போது நீதியமைச்சராக இருந்த தலதா அத்துகோரல என்னை தூக்குக்கு அனுப்புவதில் உறுதியாக இருந்தார். நான் மட்டுமல்லாது, துமிந்த சில்வாவும் கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுத்திருந்தார்.

இதனை ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளே நிரூபித்துவிட்டன. எனக்கெதிராக அவர்கள் அன்று சாட்சிகளை உருவாக்கினார்கள். சி.சி.டி.வி. காட்சிகள் முதற்கொண்டு அனைத்தையும் பொலிஸாரின் உதவியுடன், எனக்கு எதிராக தயார் படுத்தினார்கள்.

ஆனால், எனக்கு தெரியும், நான் மனசாட்சிக்கு விரோதமாக செயற்படுபவன் அல்ல என்று. செய்யாத குற்றத்திற்காகத்தான் என்னை தண்டித்தார்கள். பிள்ளையானும் இவ்வாறான அரசியல் பழிவாங்கலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவரது வழக்கு இன்னமும் விசாரணை செய்தே முடிக்கவில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நான் குற்றமிழைக்காத காரணத்தினால்தான் மக்கள் என்னை மீண்டும் தெரிவு செய்தார்கள். இதனையிட்டு நான் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்துத் தரப்புக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நாட்டுக்கு சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரு தலைவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து, பணியாற்ற நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.

அந்த வகையில், 20 ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் கொண்டுவர நாம் செயற்பட வேண்டும். இந்த உறுதிமொழியைக் கூறி தான் நாம் பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டோம்.” என கூறினார்.

No comments:

Post a Comment