நியூ டயமன் கப்பலிலுள்ள எரிபொருள் வகைகளின் அனைத்து மாதிரிகளையும் பெற நடவடிக்கை - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

நியூ டயமன் கப்பலிலுள்ள எரிபொருள் வகைகளின் அனைத்து மாதிரிகளையும் பெற நடவடிக்கை

கிழக்கில் தீ அனர்த்தத்திற்கு உள்ளான நியூ டயமன் எண்ணெய்க் கப்பலிலுள்ள அனைத்து எரிபொருள் வகைகளிலும் மாதிரிகளை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கிணங்க நேற்றைய தினம் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேற்படி கப்பல் தற்போது கிழக்கில் சங்கமன்கண்டிக்கு கிழக்கு திசையில் 53 கடல் மைல் தூரத்தில் தரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி மாதிரிகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட குழுவொன்று நேற்று அங்கு சென்றதாக சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை நேற்று தெரிவித்தது.

சுழியோடிகளின் உதவியுடன் தொடர்ந்தும் அந்தக் கப்பலை பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்தது

அதேவேளை சட்டமா அதிபரின் தலைமையில் நேற்றையதினம் மேற்படி கப்பலில் தீயை கட்டுப்படுத்துவதற்கு செயற்பட்ட அனைத்து நிறுவனங்களினதும் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அந்தப் பேச்சுவார்த்தையில் கடற்படை அதிகாரிகள், துறைமுக அதிகார சபை அதிகாரிகள், கடற்கரை பாதுகாப்பு திணைக்களம்,சமுத்திரவியல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் வர்த்தக கப்பல் திணைக்களம் அதனோடு இணைந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

மேற்படி பேச்சுவார்த்தையையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அந்த அதிகார சபை தெரிவித்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment

Post Bottom Ad