20 ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரமென தவறான பிரசாரம் என்கிறார் ஜீ. எல்.பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

20 ஆவது திருத்தத்திற்கு அமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பு, ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரமென தவறான பிரசாரம் என்கிறார் ஜீ. எல்.பீரிஸ்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கமைய நாட்டிற்கு முழுமையான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டியது அவசியமென கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

விடயங்களை ஆழமாக ஆராய்ந்து அரசியலமைப்பை தயாரிக்க வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், மக்கள் ஆணையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

20வது திருத்தம் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்படுவதாகவும் அது ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சில தரப்பினர் தெரிவித்து வருவது தவறான சிந்தனையாகும்.

20வது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கான முதலாவது நடவடிக்கையாகும்.

காலத்திற்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். முழுமையான அரசியலமைப்பு தயாரிப்பதானது முக்கியமானது என்றும் அதற்காக அனைவரினதும் கருத்துக்களை பெற்றுக் கொள்வதும் அவசியமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர் அதற்காக சில காலம் எடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டு அதற்காக நாம் முழுமையான காலத்தை எடுத்துக் கொள்ள முடியாததால் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகிறது.

அரசாங்கமே அரசியலமைப்பை முன்வைக்கின்றது. அதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறது. அதேவேளை அது தனி நபரொருவரினால் தயாரிக்கப்பட்டது அல்ல என்றும் அவர் தெரிவித்தார். 

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தலைவருக்கு நாட்டின் பொறிமுறையை தயாரிப்பதற்கான தீர்மானத்தை மேற்கொள்ளும் உரிமை இருப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக மனிதவள அபிவிருத்திக்கு அவசியமான ஐந்து நிறுவனங்களை இணைத்து ஒரு அமைச்சின் கீழ் அதற்கான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment