வவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால் பதற்ற நிலை - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

வவுனியா பிரதேச செயலகத்தில் தீக்குளிக்க முற்பட்ட குடும்ப பெண்ணால் பதற்ற நிலை

காணிப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை என தெரிவத்து வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் தீக்குளிக்க முற்பட்ட பெண்ணால் அவ்விடத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.

இன்று (23) காலை 10.00 மணியளவில் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவிற்குளம் பகுதியில் வசித்து வரும் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவருக்கும் அவரது கணவரின் தாயாருக்குமிடையில் காணிப்பிரச்சினை (பெயர்மாற்றம்) இருந்து வந்துள்ளது.

குறித்த காணிப் பிரச்சனைக்கு பல வருடங்களாக தீர்வு கிடைக்காதமையினால் இலட்சுகாந்தன் ஞானசுந்தரி என்பவர் வவுனியா பிரதேச செயலக வளாகத்தில் அவரது பயணப் பொதியினுள் மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியுடனும் காணிப்பிரச்சினை தொடர்பான கடிதங்களை தாங்கிய பதாதைகையினையும் ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன் காரணமாக அவ்விடத்தில் சற்று பதட்டமான நிலமை காணப்பட்டதுடன் வவுனியா சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விஜயம் மேற்கொண்டதுடன் பெண்ணின் பயணப் பொதியினுள் இருந்த மண்ணெண்ணெய் மற்றும் தீப்பெட்டியையும் மீட்டெடுத்தனர்.

அதன் பின்னர் வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் அவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணும் பொலிஸாரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்ணின் கணவரின் தாயாரை அழைத்து அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு காணிப் பிரச்சனைக்கு தீர்வினை தருவதாக பிரதேச செயலாளர் வாக்குறுதி அளித்தமையடுத்து பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பதற்றநிலமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

வவுனியா தீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad