(செ.தேன்மொழி)
கொழும்பு - மருதானை பகுதியில் இயங்கி வந்த போலி கச்சேரி சுற்றிவளைக்கப்பட்டு சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த கச்சேரியிலிருந்து 227 போலி இறப்பர் முத்திரிகைகள், 300 போலி வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், 42 போலி ஆவணங்கள், 9 போலி தேசிய அடையாள அட்டைகள், மடிக்கணணி, அச்சு இயந்திரம், தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட இறப்பர் முத்திரைகளில் அரச உயர் அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் பதிக்கப்பட்ட முத்திரைகளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காணமாக தனிமைப்படுத்தி வைக்கும் நபர்களை உறுதிப்படுத்துவதற்காக வழங்கப்படும் சான்றிதழ் ஒன்றும் இங்கு போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊழல் விசாரணைப்பிரிவினர் முன்னெடுத்து வருகின்றது.
No comments:
Post a Comment