கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாண பணிகளை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது : அமைச்சர் ஜயந்த சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாண பணிகளை அரசாங்கம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளது : அமைச்சர் ஜயந்த சமரவீர

(இராஜதுரை ஹஷான்) 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிறிதொரு தரப்பினருக்கு வழங்காமல் அரசுடமையாக்கி நிர்மாண பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு வழங்குவது இனிவரும் காலங்களில் மட்டுப்படுத்தப்படும் என களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள் துறைமுக வழங்கல், இயந்திர படகுகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார். 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் கடந்த அரசாங்கம் செய்யவிருந்த ஒப்பந்தத்தின் ஊடாக முனைய அபிவிருத்தி மற்றும் நிர்வாக பொறுப்பு ஆகியவை இந்தியாவுக்கு வழங்கப்படுமா அல்லது ஜப்பானுக்கு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரம் இராஜதந்திர மட்டத்தில் பிரதான பேசுபொருளாகவும் காணப்பட்டது. 

அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட கால ஒப்பந்த அடிப்படையில் சீன நாட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தினால் எமது நாட்டுக்கு எவ்வித வருமானங்களையும் எம்மால் குறித்த காலப்பகுதிகளுக்குள் பெற்றுக்கொள்ள முடியாது. 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகளை கடந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. இதன் விளைவை நாடு இன்று எதிர்கொள்கிறது. 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிறிதொடு நாட்டவர்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, முனையத்தை அரசுடமையாக்கி அதன் அபிவிருத்தி மற்றும் பரிபாலன நடவடிக்கைகளை அரச நிறுவனத்தின் ஊடாக முன் னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment