20ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் எங்களை விட மக்களே அதிகம் கைசேதப்படுவார்கள் - ராஜித சேனாரத்ன - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

20ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் எங்களை விட மக்களே அதிகம் கைசேதப்படுவார்கள் - ராஜித சேனாரத்ன

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லை. அரசாங்கத்தில் இருக்கும் 20 க்கு எதிரானவர்களையும் இணைத்துக் கொண்டு 20 ஐ தோற்கடிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் தயாரித்துள்ள 20ஆவது திருத்தம் தொடர்பில் எங்களையும் பார்க்க பொதுமக்களே அவதானமாக இருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்க காலத்தில் 19ஆம் திருத்தத்தின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீண்டும் ஜனாதிபதிக்கு கீழ் கொண்டுவரும் நடவடிக்கையே 20 மூலம் இடம்பெற்றிருக்கின்றது. 20ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அப்போது எங்களை விடவும் மக்களே அது தொடர்பில் அதிகம் கைசேதப்படுவார்கள். 

மேலும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் 20ஆவது திருத்தம் மிகவும் கொடூரமான திருத்தமாகும். ஏகாதிபத்திய திருத்தமாகும். மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் கீழ் கொண்டுவரும் வகையிலே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. 

அத்துடன் அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் அவர்களுக்கு 150 பேர் இல்லை. ஏனெனில் 20ஆவது திருத்தத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில திருத்தங்களுக்கு அரசாங்கத்தில் இருப்பவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அதனால் அரசாங்கம் 20 ஐ நிறைவேற்றுவதில் பிளவு பட்டிருக்கின்றது. அதனால் 20 க்கு எதிராக அரசாங்கத்தில் இருக்கும் அதிகமானவர்கள் எங்களுடன் இணைந்து செயற்படுவார்கள். 

குறிப்பாக அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வெளியில் குரல் எழுப்புபவர்கள், உண்மையிலே ஜனநாயகத்தை பாதுகாக்க இவர்கள் செயற்படுகின்றார்களா என்பதை 20ஆவது திருத்தத்தில் அவர்களின் நிலைப்பாட்டின் மூலம் மக்கள் கண்டுகொள்வார்கள் என்றார்.

No comments:

Post a Comment