20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க எங்களால் முடியுமான பலத்தை பிரயோகிப்போம் - திஸ்ஸ அத்தனாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 21, 2020

20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க எங்களால் முடியுமான பலத்தை பிரயோகிப்போம் - திஸ்ஸ அத்தனாயக்க

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

அரசாங்கம் மக்கள் ஆணையை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பயன்படுத்துவதற்கு பதிலாக அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவே நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையிலே 20ஆவது திருத்தம் அமைக்கப்பட்டிருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார். 

நாளையதினம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், அரசாங்கம் நாளையதினம் 20ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 20ஆவது திருத்தத்தை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகின்றோம். பாராளுமன்றத்திலும் அதற்கு திருத்தங்களை கொண்டுவரவோ அல்லது அதற்கு ஆதரவளிக்கவோ நாங்கள் ஒருபோதும் நடவடிக்கை எடுக்கமாட்டோம். மாறாக 20ஆவது திருத்தத்தை தோற்கடிக்க எங்களால் முடியுமான பலத்தை பிரயோகிப்போம். 

மேலும் இந்த அரசாங்கத்துக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியிருப்பது நாட்டை ஸ்திரமான நிலைக்கு கொண்டு செல்லவும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குமாகும். ஆனால் அரசாங்கம் அதனை மேற்கொள்ளாது, மக்களின் ஆணையை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை பாதுகாத்து க்கொள்ளவே நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன் பிரகாரமே 20ஆவது திருத்தம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

அத்துடன் 20ஆவது திருத்தம் முற்றாக நாட்டின் ஜனநாயகத்துக்கு விராேதமானதாகும். அதனால்தான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து இதனை எதிர்த்து வருகின்றோம். மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் 20ஆவது திருத்தத்துக்கு யாருக்கும் ஆதரவளிக்க முடியாது. அரசாங்கத்துக்குள்ளும் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது. 

மேலும் அரசாங்கத்தில் இருக்கும் பங்காளி கட்சிகளின் எதிர்ப்பு காரணமாகவே 20ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய பிரதமர் குழு அமைத்து அறிக்கை கேட்டிருந்தார். ஆனால் குறித்த அறிக்கையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை. அதனால்தான் தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்வதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. 

எவ்வாறு இருந்தபோதும் மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றதுடன் நாடும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றது. இந்த நிலையில் அரசாங்கம் 20ஆவது திருத்தத்தை கொண்டுவந்து தனது அதிகாரத்தை அதிகரித்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது என்றார்.

No comments:

Post a Comment