தேங்காயின் விலை சுற்றளவுக்கமைய செயல்படுத்தப்படுகிறதா ? கண்காணிப்பில் நுகர்வோர் அதிகார சபை - News View

About Us

About Us

Breaking

Monday, September 28, 2020

தேங்காயின் விலை சுற்றளவுக்கமைய செயல்படுத்தப்படுகிறதா ? கண்காணிப்பில் நுகர்வோர் அதிகார சபை

தேங்காய்களுக்கு விதிக்கப்படும் அதிகபட்ச சில்லறை விலை சுற்றளவுக்கு அமையச் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிய சந்தை கண்காணிப்பை நடத்த நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக, நேற்று தெமடகொட மற்றும் நாரஹேன்பிட்ட பொதுச் சந்தைகளுக்கு விஜயம் செய்தபோது தேங்காய் விலை கண்டறியப்பட்டது.

இதன்போது, நாட்டின் பல பகுதிகளில் தேங்காய்கள் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதில்லை என்பது தெரியவந்தது.

இதற்கு ஒரு காரணம் கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படுவதற்கு முன்பு அதிக விலையில் மொத்தமாக வாங்கப்பட்ட தேங்காய்கள் இன்னும் சந்தையில் இருக்கின்றமையால், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வழங்க தேங்காய் இல்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட விலையில் வாங்க சந்தையில் தேங்காய் இல்லை என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேங்காய்களுக்கான கட்டுப்பாட்டு விலை சுற்றளவுக்கு அமைய நிர்ணயித்துள்ளது.

வரலாற்றில் இது இரண்டாவது முறையாக தேங்காய்க்கான அதிகபட்ச சில்லறை விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் படி 12 முதல் 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும். 12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய 13 அங்குலங்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 70 ரூபா வாகும்.

ஆகக் கூடுதலான சில்லறை விலைகளுக்கு மேலாக உற்பத்தியாளர், விநியோகஸ்தர் அல்லது வியாபாரி என எவரும் விற்பனை செய்யவோ அல்லது விற்பனைக்காக காட்சிப்படுத்தவோ முடியாது என கட்டளையிடப்பட்டுள்ளது என அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்நாட்டில் தேங்காய் ஒன்றின் விலை 100 ருபாவிலிருந்து 120 ஆக உயர்ந்தது. தேங்காய் அறுவடை குறைந்தமை மற்றும் தேங்காய் தொடர்பான பிற தொழில்களுக்கான ஏற்றுமதி சந்தை தோன்றுவதே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment