பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தவே செயற்பட்டார், அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது - ஸ்ரீதரன் எம்.பி. - News View

Breaking

Post Top Ad

Wednesday, September 23, 2020

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தவே செயற்பட்டார், அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது - ஸ்ரீதரன் எம்.பி.

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இந்த தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்த வேண்டுமென்றே செயற்பட்டுள்ளார். அதனாலேயே அவர் மீது அவதூறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். 

இந்த சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தேர்தல்கள் ஆணைக்குழு பற்றி இந்த சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேர்தல்கள் ஆணைக்குழு சிறப்பாக செயற்பட்டுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமல்ல பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான அவதூறு கருத்துக்கள் பல இன்று சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களுக்காக வந்த நிவாரண பொருட்களை தன்னுடைய தேர்தல் பிரசாரத்திற்காக யாழில் வழங்கியிருந்த நிலையில் அதனை ஆணைக்குழுவின் உறுப்பினரான ரட்ணஜீவன் ஹுலே அதனை வெளிக்கொண்டு வந்திருந்தார். 

தேர்தல்கள் ஆணைக்குழு நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட்டிருந்தமையை யாரும் மறுக்க முடியாது. பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹுல் இந்த தேர்தல் நீதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்த வேண்டுமென்றே செயற்பட்டுள்ளார். அவர் சரியாக செயற்பட்டமையினாலேயே பல்வேறுபட்ட விடயங்களை வெளியில் கொண்டு வந்தார். அவர் உயர்ந்த கல்விமான் அதுவும் தமிழர் அந்த ஆணைக்குழுவில் இருந்தமை தொடர்பான வேதனையிலேயே சிலர் கதைக்கின்றனர். 

இந்த நாட்டில் பணம் இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியுமென்ற நிலைமை உருவாகியுள்ளது. இந்த நாட்டில் ஒரு பக்கம் ராஜபக்ஷ குடும்பம் ஆட்சியில் இருக்கும் போது யாழ்ப்பாணம் அபிவிருத்திக் குழு தலைவர் என்ற போர்வையில் யாழ்ப்பாணம் அரச செயலகத்திற்குள்ளும் குடும்ப ஆட்சியொன்று நடக்கின்றது. அது அரசியல் கட்சியின் அலுவலகம் போன்று மாறியுள்ளது. இதனை கூறுவதற்கு முடியாதவர்கள் இதனை கூறிய ரட்ணஜீவன் ஹுல் மீது கோபம் கொள்கின்றனர். 

எதனையும் நாங்கள் இனவாத பார்வையில் பார்க்கக் கூடாது. அவர் மீது இந்த சபையில் பலர் வசை மாலைகளை பொழிந்தனர். இந்த சபையில் ஒரு தமிழன் தூற்றப்படும் போது அதனை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நேர்மையின் பக்கம் கதைத்தவரை அவர் கூறிய உண்மைகளை இந்த இடங்களில் கூறுவதற்கு தயங்கக் கூடாது. அவர் மீது பிழை இருந்திருந்தால் மகிந்த தேசப்பிரிய நடவடிக்கையெடுத்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் அவர் மீது குறைகளை கூறுவது உங்களின் இனத்தின் தன்மையை அது குறைத்துவிடும் என்று கூறுகின்றேன். என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad