இனவாதம், மதவாதத்தை உருவாக்கி மக்களது மனங்களில் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் - விக்னேஸ்வரனிடம் டயனா கமகே மீண்டும் வலியுறுத்து - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

இனவாதம், மதவாதத்தை உருவாக்கி மக்களது மனங்களில் அமைதியை சீர்குலைக்க வேண்டாம் - விக்னேஸ்வரனிடம் டயனா கமகே மீண்டும் வலியுறுத்து

இனவாதம், மதவாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின் போதே டயனா கமகே இவ்வாறாக விக்னேஸ்வரனுக்கு வேண்டுகோளை விடுத்தார்.

அவர் அதன்போது தெரிவிக்கையில், தமிழ் மக்கள் படும் துன்பங்களை அவதானித்துள்ளேன். வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மிகவும் இனவாத, மதவாத பேதத்துடன் பேசுவதை கடந்த காலங்களில் அவதானித்தோம். 

அவருக்கு கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் எமக்கு இல்லாமல் போன ஆறுமுகன் தொண்டமானின் புத்தகத்தில் பக்கமொன்றை எடுங்கள். அவர் அவரின் மக்களுக்காக சேவை செய்வதற்காக ஜனநாயகத்தை தெரிவு செய்த சிறந்த நபராகும்.

வடக்கு மக்களுக்கு வவுனியா தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் இணைந்து பணியாற்றியுள்ளேன். வடக்கு கிழக்கிற்கும் நான் யுத்தத்தின் பின்னர் சென்றுள்ளேன். சுதந்திரமடைந்து 73 வருடங்கள் ஆகின்றன. ஆனால் அதில் 43 வருடங்களை மாத்திரமே அனுபவித்தோம். மிகுதி 30 வருடங்களையும் கொடும் யுத்தத்திலேயே கழித்தோம்.

நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் மக்களுக்கு யுத்த மனநிலை அவசியமில்லை. இனவாதம், மதவாதம் அவசியமில்லை. இது ஒருமித்த நாடு, இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறான நிலைப்பாட்டிலேயே ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டார். அவர் சமாதானம் , நல்லிணக்கத்துடனேயே செயற்பட விரும்பினார்.

இந்நிலையில் விக்கேனஸ்வரனுக்கு சொல்ல விரும்புவது, நீங்கள் இந்த இடத்திற்கு மக்களின் வாக்குகளை பெற்று வந்துள்ளமையானது அந்த மக்களுக்காக வேலை செய்வதற்கே ஆகும். 

அந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் , நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே உங்களின் கடமையாகும். அதனை விடுத்து இனவாதம், மதவாதத்தை அந்த மக்களின் மனங்களில் உருவாக்கி பெற்றுள்ள அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார். ''

லோரன்ஸ் செல்வநாயகம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment