மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : காவிந்த ஜெயவர்தன - News View

About Us

About Us

Breaking

Saturday, September 12, 2020

மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் : காவிந்த ஜெயவர்தன

(செ.தேன்மொழி) 

மாகாண சபைகளின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன வலியுறுத்தியிருக்கின்றார். 

புதிய அரசியலமைப்பு வரைபின் போது மாகாண சபைகள் தொடர்ந்தும் பேணப்படுமா ?அல்லது புதிய நிர்வாக முறையொன்று அறிமுகப்படுத்தப்படுமா ? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் கேள்வியெழுந்திருக்கின்றது. இது தொடர்பில் காவிந்த ஜெயவர்தனவை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மத்தியில் வேறுப்பட்ட கருத்துக்கள் காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இந்த திருத்தமானது நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கமைய கொண்டுவரப்பட்டதாகும். அதற்கமைய இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஊடாகவே இந்த திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தற்போது மகாண சபைகள் கலைக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தலை நடத்துவதா ? இல்லையா என்பது தொடர்பில் அரசாங்கம் எந்த நிலைப்பாடும் இல்லாமல் இருக்கின்றது. வடகிழக்கு தமிழ் மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேச ஆரம்பித்ததன் பின்னரே இந்த மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. 

ஏனைய மாகாணங்களை பொருத்தமட்டில் அது மத்திய அரசாங்கத்துடன் நேரடியான தொடர்பை பேணி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் வடக்கு, கிழக்கு பகுதிகளை பொருத்தமட்டில் மத்திய அரசாங்கத்துடன் நேரடி தொடர்பை பேணுவதில் சிக்கல் காணப்படுகின்றது. 

இதேவேளை வடகிழக்கு பகுதிகளில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுள் பெரும்பாலானோர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அதனால் அப்பகுதிகளுக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செல்வதிலும் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது. இந்த பகுதிகளே யுத்த காலத்தின் போது பெரிதும் பாதிப்படைந்துள்ளன. அதனை முன்னேற்றுவது அவசியமாகும். 

இந்நிலையில் மாகாண சபைகள் செயற்படுத்தப்பட்டால், அதனூடாக அப்பகுதி மக்கள் பயனைப் பெற்றுக் கொள்ளுவார்கள். இந்தியா போன்ற வளர்ச்சியடைந்த நாட்டினால் கொண்டுவரப்பட்ட இந்த யோசனையை கடைப்பிடித்தால் எமது நாட்டையும் வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்பதே எமது கருத்து என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment