அமைதிப் பேச்சுவார்த்தையை நாளையே தொடங்க தயார் - ஆப்கானிஸ்தான் அரசுக்கு அழைப்புவிடுத்தது தலிபான் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

அமைதிப் பேச்சுவார்த்தையை நாளையே தொடங்க தயார் - ஆப்கானிஸ்தான் அரசுக்கு அழைப்புவிடுத்தது தலிபான் அமைப்பு

அமைதிப்பேச்சுவார்த்தையை நாளையே தொடங்க தயார் - ஆப்கானிஸ்தான் அரசுக்கு அழைப்புவிடுத்த தலிபான் அமைப்பு
ஆப்கானிஸ்தான் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நாளையே தொடங்க தயாராக இருப்பதாக தலிபான் அமைப்பு அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பெப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து தனது படைகளை திரும்பப் பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் திரும்பப் பெறப்பட்டுள்ளனர்.

மேலும் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் தலிபான் அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிப்போம் எனவும் தங்கள் பிடியில் உள்ள 1,000 பேரை விடுவிப்போம் எனவும் தலிபான் அமைப்பினர் கெடு விதித்தனர்.

இதையடுத்து, ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பல கட்டங்களாக 4 ஆயிரத்து 991 தலிபான் அமைப்பினர் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

ஆனால் தலிபான் அமைப்பிலுள்ள 9 பேர் மட்டும் தற்போது வரை விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தான் அரசு - தலிபான் அமைப்பு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிணையாக இருப்பார்கள் என தகவல் வெளியானது.

தலிபான்கள் உடனான பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் எட்டப்பட்ட பின்னர் எஞ்சிய தலிபான் அமைப்பினர் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தங்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு தலிபான் தலிபான் அமைப்பு இன்று அழைப்பு விடுத்துள்ளது.

அந்த அழைப்பில் பேச்சுவார்த்தையை நாளையே (சனிக்கிழமை) தொடங்கலாம் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தலிபான்களின் அழைப்பிற்கு அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற உள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அரசு சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று கத்தார் புறப்பட்டு செல்கிறார்.

மேலும், தலிபான்களின் அழைப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்களின் எண்ணிக்கை மிகவும் விரைவில் 4 ஆயிரம் என்ற அளவிற்கு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா அரசுகள் இணைந்து தலிபான் அமைப்பினருடன் மேற்கொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் 20 ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment