மலையக மக்கள் முன்னணியின் புதிய செயலாளர் நாயகமாக பேராசிரியர் எஸ். விஜயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதித் தலைவராக ஏ.லோரன்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூட்டம் இன்று (10) கொழும்பில் சபயார் விருந்தகத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் கொழும்பில் நேற்று (09) கூடி இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டம் கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றதுடன் கூட்டத்தில் கட்சியின் அரசியல் துறை தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அ.அரவிந்தகுமார், கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், பிரதி செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜயசந்திரன் உட்பட கட்சியின் அனைத்து உயர்பீட கவுன்சில் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்த பின்பு மலையக மக்கள் முன்னணியை மறு சீரமைப்பது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக இன்று கட்சியின் புதிய செயலாளராக, பிரதி செயலாளராக கடமையாற்றிய பேராசிரியர் விஜயசந்திரன் ஏகமனதாக கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியின் செயலாளர் நாயகமாக செயற்பட்டு வந்த லோரன்ஸ் தொடர்ந்தும் சுகவீனம் காரணமாக தன்னால் செயலாளராக செயற்பட முடியாது என்ற காரணத்தைத் தெரிவித்து தான் அந்த பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு பிரதி செயலாளராக இதுவரை கடமையாற்றிய பேராசிரியர் விஜயச்சந்திரன் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த கூட்டத்தின்போது முன்னாள் செயலாளர் நாயகம் லோரன்ஸ் கட்சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் எனவும் அவர் கட்சியோடு தொடர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் கட்சியின் உயர்பீடம் அங்கத்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய அவரை கட்சியின் பிரதித் தலைவராக நியமிப்பது எனவும் தீர்மானித்து அவரை கட்சியின் பிரதித் தலைவராக ஏகமனதாகத் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
இந்த நியமனங்கள் இன்று கட்சியின் உயர்பீட அங்கத்தவர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றது. எதிர்காலத்தில் இன்னும் கட்சியில் பல மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் இது கட்சியின் நலன் சார்ந்த விடயங்களை மாத்திரம் கருத்தில் கொள்ளப்படும் எனவும் தனிப்பட்ட யாருடைய விருப்பு வெறுப்புக்கும் முடிவுகள் எடுக்கப்படமாட்டாது எனவும் கட்சியில் முழுமையாக ஜனநாயக முறைப்படி உயர்மட்ட உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு முடிவுகள் எட்டப்படும் எனவும் எதிர்வரும் வாரங்களில் கட்சியின் நலனை கருத்தில் கொண்டு அனைவருடைய ஒத்துழைப்புடனும் இன்னும் பல மாற்றங்கள கொண்டு வரப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக நிருபர் தியாகு
No comments:
Post a Comment