மாணவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது - News View

About Us

About Us

Breaking

Saturday, September 26, 2020

மாணவி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் கைது

பலாங்கொடை - ஒலுகன்தோட்டம், வெலிஹரனாவ பிரிவில் மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் பெற்றோருடன் நெருங்கிப் பழகிய ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஒலுகன்தோட்டம் - வெலிஹரனாவ பிரிவில் கடந்த 22 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் 17 வயது மாணவியான கே.லோசினி உயிரிழந்தார்.

கீழே வீழ்ந்து காயமேற்பட்டதாகத் தெரிவித்து தாயாரால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் மாணவியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கழுத்து நெரிக்கப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

தாம் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தந்தையின் நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்து சென்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார். அவர் வீடு திரும்பிய போது இனந்தெரியாத ஒருவர் பின்வாசல் வழியாக தப்பிச் சென்றதைக் கண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பலாங்கொடை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment