முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க அவதானம் செலுத்தப்படும், அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமை அவசியம் : ஜனாதிபதி கோத்தபாய - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 22, 2020

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்க அவதானம் செலுத்தப்படும், அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமை அவசியம் : ஜனாதிபதி கோத்தபாய

அரசாங்கத்தின் உயர் முன்னுரிமை கல்விக்கு எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப்பதற்காக முன்பள்ளி முதல் உயர் கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் அமைந்த திட்டமொன்றை தயாரித்து செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மையான குறிக்கோள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாலர் அபிவிருத்தி மற்றும் ஆரம்பக் கல்வி பிள்ளைகளின் வாழ்வில் மிக முக்கிய கட்டமாக கருதி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (21) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் அவ்வாறு குறிப்பிட்டார்.

முன்பள்ளி கல்வி தொடர்பாக இதுவரை உரிய அவதானங்களோ, ஒழுங்குவிதிகளோ இருக்கவில்லை. அதனால் சிறுவர் கல்வி தொடர்பான நிபுணர்களின் ஒத்துழைப்புடன் முறையான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

“தெளிவான மனதுடன் கல்வியை பெற்றுக் கொள்ளும் பின்புலத்தை பிள்ளைக்கு ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் பிள்ளைகளை தொடர்ச்சியாக பாராட்டுதல் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் பொறுப்பாகும். பணம் அறவிடப்படாத முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கவும் அவதானம் செலுத்தப்பட்டது. அவர்கள் சங்கடத்திற்கு ஆளாகாத வகையில் ஒழுங்கு முறைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குவது இன்னுமொரு நோக்கமாகும். முன்பள்ளி பிள்ளைகளின் திறமைகளை அபிவிருத்தி செய்வதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை வழங்குவதற்கும் நாம் திட்டமிட்டுள்ளோம். நாட்டில் அனைத்து பாடசாலைகளிலும் உள்ள வளங்களை இனங்கண்டு உரிய முறையில் முகாமைத்துவம் செய்வது அதிகாரிகளினதும் நிர்வாகிககளினதும் பிரதான பொறுப்பாகும்.” என ஜனாதிபதி தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் பொறுப்பதிகாரிகள் அலுவலக செயற்பாடுகளில் முடங்கிக் கொள்ளாமல் பாடசாலைகளுக்குச் சென்று பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி காரியாலயங்களுக்கு வருவதற்கு பதிலாக அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் முறைமையின் அவசியத்தையும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்  சுட்டிக்காட்டினார்.

தமது தொழில் ரீதியான பல்வேறு தேவைகளுக்காக வலய காரியாலயங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் பற்றி தமது அதிருப்தியை தெரிவித்த பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ, அதிகாரிகள், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்டார். 

அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர் மற்றும் சுகாதார தேவைகளை குறுகிய காலத்தில் நிறைவு செய்வதன் முக்கியத்துவம் பற்றியும் பெசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். 

அங்கவீனமுற்ற சிறுவர்களை சமூகமயப்படுத்தக் கூடிய வகையில் அவர்களின் திறமைகளை அபிவிருத்தி செய்யும் வகையில் விசேட கல்வி அலகொன்றை மாவட்ட ரீதியாக ஸ்தாபிப்பது தொடர்பாகவும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அவ்வாறான பிள்ளைகள் இருக்கக்கூடிய குடும்பங்களை உள ரீதியான மற்றும் பொருளாதார ரீதியான பின்னடைவுகளில் இருந்து மீட்டெடுப்பதற்காக பண ரீதியான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று பெசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார். 

துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு ஆளாகின்ற பெண்களின் நலனுக்காக பெண்கள் தொடர்பான தேசிய குழுவின் அவசியத்தை கவனத்திற்கொண்டு பாராளுமன்ற சட்டமூலத்தின் மூலம் அவசியமான சட்டத்தை உருவாக்குவது தொடர்பாகவும் நேற்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்ற பிள்ளைகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கும் பிள்ளைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் சாட்சிகளை விசாரிப்பதற்கு மூடிய நீதிமன்ற வசதிகளை ஸ்தாபித்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. 

வகுப்பறையில் இருந்து வெளியேறும் பிள்ளை தமது கதிரை மற்றும் மேசையை உரிய முறையில் வைத்துச் செல்வதற்கு பழக்கப்படுத்துவது முதல் நாட்டை, சமூகத்தை விரும்பக்கூடிய கருத்து ரீதியான மாற்றத்தைக் கொண்ட பிரஜையாக உருவாகக்கூடிய கல்வி முறையொன்று தயாரிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், துறைசார் நிறுவனங்களின் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment