மட்டக்களப்பில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம் பற்றி ஆராய்வு - News View

Breaking

Post Top Ad

Monday, September 14, 2020

மட்டக்களப்பில் சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம் பற்றி ஆராய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

சகவாழ்வைக் கட்டியெழுப்ப செயற்திறனான பங்களிப்பைச் செலுத்துதல் திட்டம் பற்றி ஆராய்ந்து முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதன் மாவட்ட இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.

இதுவிடயமாக முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பு கூட்டுறவு கேட்போர் கூடத்தில் ஞாயிறன்று 13.09.2020 இடம்பெற்றது.

தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களும் அதன் வளவாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் எஸ். கமலதாஸன், கொரோனா வைரஸ் பாதிப்பின் பின்னரான பொருளாதார இழப்புக் கால கட்டத்தில் தேசிய ஐக்கியம் சகவாழ்வு என்பன மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பது உணரப்பட்டுள்ளது.

இதனால் இனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தி செயற்திறன் மிக்க பிரஜைகளாகச் செயற்படுதல் வேண்டும் என்பதில் அவதானம் செலுத்தப்படுகின்றது.

இதில் ஓர் அம்சமாக நாட்டில் காணப்படும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வு காண்பதனூடாக இனங்களுக்கிடையிலான ஏற்றதாழ்வுகளையும் விரிசலையும் குறைக்க முடியும் என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சமூகங்களுக்கிடையில் சகல அம்சங்களிலும் உயிரோட்டமுள்ள தொடர்பைப் பேணுவதனூடாக சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
சமூகங்களுக்கிடையில் காணப்படும் பல்வேறு வேறுபாடுகள் காரணமாக சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வில் பெரியளவிலான இடைவெளி காணப்படுகின்றது.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் முரண்பாடான நிலைமைகள் இவ்வாறான இடைவெளிகளுக்குக் காரணமாகும்.

ஒரு சமூகம் அந்த சமூகத்தின் அல்லது இனத்தின் நல்ல விடயங்களை மாத்திரம் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால் இந்த சமூகங்களுக்கிடையிலான இடைவெளி குறைந்தே வந்திருக்கும் நிலைமையை நாம் அவதானிக்கின்றோம்.

இவ்வாறான நிலைமைகள் பொது நோக்கம் அல்லது உயரிய இலக்கை அடைவதற்கு தடையாக அமைந்து விட்டிருக்கின்றன.

எனவே, இனிமேல் இவ்வாறான சமூகப்பாகுபாடுகள் எதுவும் சமாதான சகவாழ்வைச் சீர்குலைக்காத வண்ணம் திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

இதற்கு தேசிய சமாதானப் பேரவை மாவட்ட சர்வமதப் பேரவைகளுடாக திட்டங்களை வகுத்து அமுலாக்கவுள்ளது.” என்றார்.

அங்கு மாவட்ட சர்வமத பேரவைக் குழுக்களால் அடுத்த 3 ஆண்டுகளுக்கான சகவாழ்வைக் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

இந்நிகழ்வில் இலங்கை தேசிய சமாதானப் பேரவையி;ன் திட்ட அதிகாரிகளான இயந்தி குலதிலக்க, எஸ். கமலதாஸன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad