சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம் தொடர்பில் 607 மணி நேர சி.சி.ரி.வி. காட்சிகள் பகுப்பாய்வுக்கு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 8, 2020

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம் தொடர்பில் 607 மணி நேர சி.சி.ரி.வி. காட்சிகள் பகுப்பாய்வுக்கு

சுவிஸ் தூதரக பெண் விவகாரம்: சண்டே ஒப்சவர் பத்திரிகையின் செய்தி ஆசிரியரிடம்  விசாரணை - voiceofilankai.lk
(எம்.எப்.எம்.பஸீர்) 

கடத்தி தடுத்து வைக்கப்பட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்பட்ட, பொய்யான தகவல்களை வழங்கி தேசத்தை அசெளகரியப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் விவகார விசாரணைகள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி மன்றுக்கு அளிக்குமாறு சி.ஐ.டி. க்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இது குறித்த வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார். 

இந்த விவகார வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிணையில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகத்தின் வீசா பிரிவின் சிரேஷ்ட குடிவரவு குடியகல்வு அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ், மன்றில் ஆஜரானதுடன், அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆஜரானார். 

விசாரணையாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யின் பொலிஸ் பரிசோதகர் இக்பால் ஆஜரானார். மேலதிக விசாரணை அறிக்கையினை மன்றுக்கு சமர்ப்பித்த பொலிஸ் பரிசோதகர் இக்பால், இந்த விவகாரத்தில் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் பிரகாரம், 607 மணி நேரங்கள் வரையில் நீண்ட சி.சி.ரி.வி. கமரா பதிவுகள் கைப்பற்றப்பட்டு அவை பகுப்பாய்வுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

இது குறித்த பூரண பகுப்பாய்வு அறிக்கையினைப் பெற்றுக்கொள்ள சுமார் 10 மாதங்கள் வரை செல்லுமென அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளதாகவும் அவர் மன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்தார். 

இதன்போது நீதிவான் லங்கா ஜயரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.ஐ.டி. பொலிஸ் பரிசோதகர், குறித்த 607 மனி நேர சி.சி.ரி.வி. காணொளிகளில், சந்தேக நபரான கானியா பம்பலபிட்டி - பெல் மயூரா பகுதியில் உள்ள தனது சிநேகிதியான ஆசிரியரின் வீட்டுக்கு சென்றமை, அங்கிருந்து காலி வீதி ஊடாக மருதானை - மாளிகாகந்த பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்கின்றமை உள்ளடங்கும் சி.சி.ரி.வி. காணொளி அடங்கிய இரு வெட்டும் அடங்குவதாக கூறினார். 

இதன்போது இந்த விசாரணைக்கு அவசியமான சி.சி.ரி.வி. காணொளிகளை மட்டும் பகுப்பாய்வு செய்து அறிக்கை பெறுதல் போதுமானது என நீதிவான் விசாரணையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார். 

அதன்படி இந்த கடத்தல் இடம்பெற்றதாக கூறப்படும்,. 2019 நவம்பர் 25 ஆம் திகதி பிற்பகல் 2.30 மனிக்கும் மாலை 6.30 மனிக்கும் இடைப்பட்ட நேரத்துக்குரிய சி.சி.ரி.வி. காணொளிகளை மட்டும் பகுப்பாய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதிவான் விசாரணை அதிகாரிகளை அறிவுறுத்தினார். 

இதன்போது மன்றில் ஆஜரான கானியா பெனிஸ்டரின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, கடத்தல் இடம்பெற்ற தினத்திலிருந்து ஒரு வாரம் முன்னோக்கிய சி.சி.ரி.வி. காணொளிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கை பெற வேண்டும் எனவும், அந்த திகதியில் குறித்த நேரத்துக்கு உரிய காட்சிகளை மட்டும் பகுப்பாய்வு செய்வது தனது சேவையாளருக்கு பாதகமாக அமையலாம் எனவும் தெரிவித்தார். 

இதன்போது இத்தகைய கோரிக்கை முன் வைப்பதற்கான காரணம் உள்ளிட்ட விபரங்களை உரிய தரவுகளுடன் அடுத்த வழக்குத் தவணையில் எழுத்து மூலம் முன்வைக்குமாறு நீதிவான், சந்தேகநபரின் சட்டத்தரணிக்கு அறிவித்தார். அதன்படி இது குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment