கற்றாழை தொழிற்சாலை ஒன்றை எதிர்காலத்தில் நிறுவ எதிர்பார்ப்பதுடன் அதனூடாக 300 பேர்களுக்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பு : கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

கற்றாழை தொழிற்சாலை ஒன்றை எதிர்காலத்தில் நிறுவ எதிர்பார்ப்பதுடன் அதனூடாக 300 பேர்களுக்கும் அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பு : கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்

நூருல் ஹுதா உமர்

கற்றாழை பயிர் செய்கையை வீட்டுத் தோட்டமாக அறிமுகமாக்கும் பரீட்சார்த்த வேலைத்திட்ட அறிமுக கூட்டம் இன்று (14) அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு பேசிய அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு அடிப்படையில் நாட்டை கட்டி எழுப்பும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கற்றாழை செய்கையை அம்பாறை மாவட்டம் முழுவதும் செயற்படுத்தி குறைந்த வருமான மட்டமுடைய குடும்பங்களின் வருமானத்தை அதிகரித்து வறுமையை ஒழிக்கும் சிறந்த வேலைத்திட்டமாக இத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கட்சி, இன, மத பேதமின்றி அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள, தமிழ்,முஸ்லிம் என மூவினத்தவர்களும் செறிந்து வாழும் மூன்று பிரதேச செயலகங்களை தெரிவு செய்து அங்கு வாழும் குறைந்த வருமானமுடைய ஆயிரம் குடும்பத்தவர்களில் பரீட்சார்த்தமாக இந்த கற்றாழை பயிரிடும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை சமுர்த்தி வங்கி ஊடாக கடனாக பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஐந்து பேர்ச்சஸ் காணியில் கற்றாழை செய்கை மேற்கொள்வதன் மூலம் மாதமொன்றிற்கு ரூபா முப்பத்தைந்தாயிரம் வருமானத்தை பெற்றுக் கொள்ள இயலுமானதாக இருக்குமெனவும் தெரிவித்தார்.
இங்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உரையாற்றும் போது கிழக்கு மாகாணம் வறுமைக்குட்பட்ட மக்கள் வாழும் மாகாணம் அவர்கள் வறுமையிலிருந்து விடுபட வேண்டும் அதற்கான ஒரு முயற்சியாக அம்பாறை மாவட்டத்தில் பரீட்சார்த்தமாக இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறியதுடன் இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க பயனாளிகளை ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் கற்றாழை தொழிற்சாலை ஒன்றை எதிர்காலத்தில் நிறுவ எதிர்பார்ப்பதுடன் அதனூடாக 300 பேர்களுக்கும் அதிகமான தொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்படுமெனவும் கூறினார்.

இறுதியில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கற்றாழை கிளைகள் ஆளுனராலும் கலந்துகொண்டிருந்த அதிதிகளாலும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வுவில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.ஏ. நஸீர், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் கலீலுர் ரஹ்மான், மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள், மதத் தலைவர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment