தலிபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடி மீது துப்பாக்கியால் சுட்டு கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 28 பொலிசார் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக கத்தார் நாட்டில் தலிபான் தலைவர்களுக்கும், ஆப்கானிஸ்தான் அரசு குழுவினருக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒரு வார காலத்துக்கு மேலாக நீடித்து வருகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதல்களும் வலுத்து வருகின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இரவில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 14 போலிசாரும், பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் ராணுவம் மற்றும் பொலிஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் 25 தலிபான்கள் பலியாகினர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தருகின்ற வகையில் தலிபான்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பொலிஸ் சோதனைச்சாவடி மீது துப்பாக்கியால் சுட்டு கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 28 பொலிசார் கொல்லப்பட்டுள்ளனர்.
முதலில் 28 பொலிசாரும் சரணடைந்தால் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதாக தலிபான்கள் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். பின்னர் அந்த பொலிஸாரிடம் துப்பாக்கிகளைப் பெற்றுக் கொண்டதை அடுத்து அவர்களை கொன்றுள்ளனர் என்று உருஸ்கான் ஆளுநரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் தலிபான்கள் அந்தப் பொலிஸார் சரணடைவதை மறுத்ததை அடுத்தே கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மோதலின்போது 3 பொலிசார் மட்டும் தப்பித்து விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment