தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்க முடியாது - தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை - News View

Breaking

Post Top Ad

Monday, September 21, 2020

தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்க முடியாது - தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை

தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது என வலியுறுத்துவதுடன் இந்த அரசு அஞ்சலி செலுத்தும் விடையத்தில் ஜனநாயகத் தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவைத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் இன்று 21ம் திகதி ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது, இலங்கைத்தீவு 1948ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்தே, சிங்கள இனத்தவர்களால் இலங்கையின் ஆதிக்குடிகளான, தமிழர்கள் மீதான அடக்கு முறைகளும், ஒடுக்குமுறைகளும் ஆரம்பிக்கப்பட்டன. தமிழர்களுக்கு எதிராக அன்று தொடங்கிய சிங்களவர்களின் இனவாதம் இரு தரப்பிரனடையேயும் பல முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது அது இன்றும் பல தசாப்தங்களை கடந்தும் தொடர்கின்றது. 

இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாதிகளால் காலத்துக்குகாலம் தமிழர்கள், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் உரிமைகள், தமிழர் நிலங்கள், தமிழர் அடையாளங்கள் மீதும், தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்களப் பேரினவாதம் இந்த நாட்டில் பல இலட்சம் உயிர்களைக் காவு கொண்டும், சொல்லிலடங்கா பல இழப்புக்களையும் சந்தித்தது இன்றும் தமிழர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியவில்லை என்பதே மறுக்கப்பட முடியாத உண்மையாகும்.  

ஆனால் இலங்கையில் தொடர்ச்சியாக மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய சிங்களப் பேரினவாத சக்திகள் அனைத்துமே தமிழர்களை அடக்கி ஒடுக்குவதிலும், தமிழருக்கு சொந்தமான நிலங்களை சூரையாடுவதிலுமே குறியாக இருந்தன, இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழினத்தின் இளைஞர்கள் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும், அரசியல் ரீதியிலும், போராடி தங்களது உயிரை மாய்த்துக் கொண்டார்கள். 

தியாகி திலீபன், அன்னை பூபதி போன்றவர்கள் தமிழ் இனத்தின் விடுதலையினை முன்னிறுத்தி, அமைதிப்படை என்ற பெயரில் இங்கு வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் அடக்குமுறையினை எதிர்த்து ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து காந்தி தேசத்தை நோக்கி அகிம்சை வழியில் போராடி தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்கள். 

ஆனால் இன்று இலங்கை நாட்டில் நடந்து கொண்டிருப்பது என்ன? புதிய கோத்தாபய தலைமையிலான ஆட்சியில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடி மடிந்த வீரர்களின் நினைவு அஞ்சலிகளை நடாத்தக்கூடாது என பேரினவாதத்தின் உச்சக்கட்டம் தமிழர்கள் மீது பாய்ந்திருக்கின்றது. 

தியாகி திலீபனுடைய 33வது நினைவு நாட்கள் ஆரம்பித்து இருக்கின்ற இவ்வேளையில் தமிழர்கள் அஞ்சலி நிகழ்வுகளை அனுஸ்டிக்கக் கூடாது என்று நாட்டின் பாதுகாப்பு செயலாளரும், இலங்கை காவல்துறையின் உயர் அதிகாரியும் கூறியது மட்டுமின்றி பல்வேறு வழிகளாலும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள் என்றால் இது இலங்கைத்தீவில் வாழும் தமிழர்கள் மீதான உச்சகட்ட ஜனநாயக அடக்குமுறை ஆகும். 

இலங்கையில் இந்த புதிய அரசாங்கத்தில் தமிழர்கள் மீதான ஜனநாயக உரிமை மீறலானது இன்று சர்வதேசத்தின் பார்வைக்கு ஒரு வலுவான செய்தியை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆதிக்குடிகளான தமிழர்கள் இந்த நாட்டில் எப்பொழுதுமே நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், தனித்துவமாகவும் வாழ முடியாது அல்லது அதற்கான வாய்ப்பே இல்லை என்கிற செய்தியை கோட்டாபாய தலைமையிலான அரசு வெளிப்படையாகவே சர்வதேசத்திற்கு தெரிவித்துள்ளது. 

தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட அஞ்சலித்தடை இராணுவ பிரசன்னம் என்பன, குறிப்பாக வடக்கு, கிழக்கில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகின்ற பிரச்சினைகளாகத் தொடர்கின்ற போதும் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் மௌனம் காப்பது என்பது இதன் பின்னனியில் முக்கிய சூத்திரதாரியாக இவர்கள் இருவரும் இருப்பார்களோ! என்ற சந்தேகமும் அதற்கான கேள்விகளும் எழத்தான் செய்கிறது. இவர்கள் இருவரினதும் மௌனம் விரைவில் கலைக்கப்பட்டு அதற்கான நேர்மையான தமிழருக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டும் என்பதையே தமிழர் தரப்பு எதிர்பார்க்கிறது. 

அதேநேரம் தமிழ் இனத்தின் ஜனநாயக விடுதலைக்காக மரணித்தவர்களை அஞ்சலிக்கும் உரிமையை எவராலும் தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது என்று பேரவையினர் வலியுறுத்துவதுடன் இந்த அரசு அஞ்சலி செலுத்தும் விடையத்தில் ஜனநாயகத் தன்மையுடன் நீதியான ஒரு பதிலை விரைவில் அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் தமிழர்கள் அகிம்சை ரீதியாக இந்த அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு சந்தர்ப்பம் உருவாகும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad