20 ஆவது திருத்தம் மூலம் அரசாங்கம் ஏகாதிபத்தியம், குடும்ப ஆட்சிக்கான வழியை ஏற்படுத்தி இருக்கின்றது - நளின் பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, September 11, 2020

20 ஆவது திருத்தம் மூலம் அரசாங்கம் ஏகாதிபத்தியம், குடும்ப ஆட்சிக்கான வழியை ஏற்படுத்தி இருக்கின்றது - நளின் பண்டார

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

20 ஆவது திருத்த ஏற்பாடுகளின் மூலம் அரசாங்கம் ஏகாதிபத்தியம் மற்றும் குடும்ப ஆட்சிக்கான வழியை ஏற்படுத்தி இருக்கின்றது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 19 ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பதென்ற காரணத்தை தெரிவித்துக் கொண்டு அரசாங்கம் ஏகாதிபத்தியம் மற்றும் குடும்ப ஆட்சிக்கான வழியை ஏற்படுத்தும் வகையில் 20 ஆவது திருத்ததை மேற்கொண்டிருக்கின்றது. 

19 இல் குறைபாடுகள் இருக்கலாம். அதனை திருத்திக் கொள்ளலாம். மாறாக அதனை காரணம் காட்டிக் கொண்டு மீண்டும் ஏதாதிபத்திய ஆட்சிக்கு வழியேற்படுத்தக்கூடாது. 

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்ததுடன் அமைச்சரவையில் 15 பேரை மாத்திரம் நியமித்தார்கள். தற்போதும் 28 பேர்வரையே இருக்கின்றனர். அப்படியாயின் எதற்காக 20 ஆவது திருத்தத்தில் அமைச்சரவையின் எண்ணிக்கை வரையறையை நீக்க வேண்டும்? 

19 ஆவது திருத்தத்தில் பல ஜனநாயக அம்சங்கள் காணப்படுகின்றன. மேலும் 20 ஆவது திருத்தம் அனுமதிக்கப்பட்டால் பாராளுமன்ற ஜனநாயகம் நீதிமன்ற சுயாதீனம் முற்றாக இல்லாமலாகின்றன. 

ஒரு வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்குவதன் மூலம் 225 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மக்களின் உரிமை மீறப்படும் ஆபத்து இருக்கின்றது. அதனால்தான் 19 ஆம் திருத்தத்தில் நாங்கள் அதனை மாற்றியமைத்தோம். 

ஏகாதிபத்திய அதிகாரத்தை தனி நபருக்கு கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் அந்த பதவிக்கு தகுதியற்ற ஒருவர் நியமிக்கப்பட்டால் எவ்வாறான தீர்மானங்களை எடுப்பார் என யாருக்கும் தெரியாது. அதனால் அரசாங்கம் ஏகாதிபத்தியம் கோத்திரவாதம் குடும்ப ஆட்சிக்கான வழியை ஏற்படுத்துவதற்கான முயற்சியே 20 இன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. அதில் நன்மை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பவர்களே ஜனாதிபதியின் கொள்கைக்கு சோரம் பாேகின்றனர் என்றார்

No comments:

Post a Comment