கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத நெருக்கடியில் அரசாங்கம் உள்ளது - எச்சரிக்கின்றார் சம்பிக்க ரணவக்க - News View

Breaking

Post Top Ad

Friday, September 11, 2020

கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத நெருக்கடியில் அரசாங்கம் உள்ளது - எச்சரிக்கின்றார் சம்பிக்க ரணவக்க

(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்) 

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச கடன் விடயங்களை இனியும் கையாள முடியாது. இந்த அரசாங்கம் கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத நெருக்கடியில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 900 பில்லியன் ரூபாய்களை கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ளது, ஆனால் இந்த அரசாங்கத்தினால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான சர்வதேச கடன்களையோ அதற்கான வட்டியையோ செலுத்த முடியாது என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உற்பத்தி, சுங்க, துறைமுக வரிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கம் நாட்டினை அபிவிருத்தி செய்வதாக கூறுகின்றனர். ஆனால் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நாட்டின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் நிலைமையில் அரசாங்கம் இல்லை. அதிவேக வீதிகலையோ, மேம்பாலங்களையோ அரசாங்கத்தினால் உருவாக்க முடியாது. 

அரசாங்கத்தின் நிலைமை எவ்வாறானது என்றால், நாட்டின் மொத்தக் கடனில் இந்த ஆண்டுக்கான வட்டியாக செலுத்த வேண்டியுள்ள 900 பில்லியன் ரூபாவைக்கூட செலுத்த முடியாத நிலையில் அரசாங்கம் தடுமாறுகின்றது. 

2020 - 2026 ஆண்டுகளில் நாட்டின் வெளிநாட்டுக் கடன் மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கப் போகின்றது. வெளிநாட்டுக் கடன்களை இனியும் எம்மால் பெற முடியாது. எமக்கான அங்கீகாரம் குறைந்து கொண்டே போகின்றது. நாடாக நாம் வீழ்ச்சி கண்டு வருகின்றோம். 

எமது பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாம் கடுமையாக சிரமப்பட வேண்டியுள்ளது. கொவிட் வைரஸுக்கு பின்னர் பொருளாதாரம் நேரில் தன்மையில் பயணிக்கின்றது. எனவே அடுத்த மூன்று மாத காலத்திற்கான பொருளாதார தன்மையை பார்த்தால் பாரிய வீழ்ச்சியையே காட்டும். 

எனவே நேரில் தன்மையில் பயணிக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன செய்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். கடனில் இருந்து மீள வேண்டும். ஆனால் நாம் சர்வதேச நிறுவனங்களை நிராகரித்து, சட்டத்திற்கு எதிராக நிதி விடயங்களை கையாண்டால் சர்வதேச நிதி நிறுவனங்கள் எம்மை கைவிடும். இந்த அச்சுறுத்தல் எமக்கு இப்போதே ஏற்பட்டுள்ளது. 

70 ஆண்டுகளாக நாம் கடன்களை பெற்று வருகின்றோம். ஆனால் எந்தவொரு அரசாங்கமும் கடன்களை மீள் செலுத்த தவறவில்லை. எனவே இந்த அரசாங்கம் முடிந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சர்வதேச கடன்களை கட்டினால் போதும். 

ஆனால் இது ஒரு சவாலாக அரசாங்கத்திற்கு இருக்கும். ஏனென்றால் இந்த அரசாங்கத்தினால் சர்வதேச கடன் விடயங்களை இனியும் கையாள முடியாது. நாம் கடந்த ஐந்து ஆண்டுகளில் சர்வதேச கடன்களை சரியாக செலுத்தி வந்துள்ளோம். ஆனால் இந்த அரசாங்கம் கடனுக்கான வட்டியை கூட கட்ட முடியாத நெருக்கடியில் விழும். 

எமது நிதியில் தான் இந்த ஆண்டு கடக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளாதாரத்தை உருவாக்குவதாக கூறிக்கொண்டு நாட்டினை பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். இலத்திரனியல் நாணய புழக்கத்தில் இருக்கின்ற நிலையில் உண்டியலில் சில்லறை சேர்க்க கூறும் ஆட்சியே உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளின் கடனை முடிந்தால் கட்டிக்காட்டுங்கள் என அவர் ஆளும் கட்சிக்கு சவால் விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad