20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இதுவரை 12 விஷேட மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக இதுவரை 12 விஷேட மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்) 

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி நேற்று மாலை வரை 12 விஷேட மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சட்ட மா அதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டே இம்மனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 121 ஆவது உறுப்புரையின் பிரகாரம் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

நேற்று மட்டும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் மூன்று மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரனி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டது. 

பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தின் சில அத்தியாயங்கள், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கையின் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணானது என்பதால், அதனை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற உறுப்பினர்களின் விஷேட பெரும்பான்மைக்கு மேலதிகமாக பொதுமக்கள் வாக்கெடுப்பும் நடத்தப்படல் வேண்டும் என தீர்ப்பொன்றினை வழங்குமாறு கோரி இம்மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

நேற்றையதினம் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக ட்ரான்ஸ்பெரன்சி இன்டர் நெஷனல் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.சி. அசோக ஒபேசேகர சார்பில் ஒரு மனுவும், யாழ். பகுதியைச் சேர்ந்த குடிமகனான எஸ்.சி.சி. இளங்கோவன் சார்பில் ஒரு மனுவும், மனித உரிமை செயற்பாட்டாளராக அறியப்படும் வெள்ளவத்தையைச் சேர்ந்த சிதாரா ஷரீன் அப்துல் சரூர் சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 

இதனைவிட கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன், பொதுமக்களான மரீன் ரோஹினி பெர்னாண்டோ, லக்மால் ஜயகொடி ஆகியோர் சார்பிலும் நேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

ஏற்கனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, சட்டத்தரணி இந்திக கால்லகே, அனில் காரியவசம், இலங்கை வெளிப்படைத் தன்மை முன்னணியின் செயலாளர் நாகானந்த கொடித்துவக்கு, மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஆகிய தரப்புக்களாலும் விசேட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 மனுக்களிலும் குறித்த திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் பொதுமக்கள் வாக்கெடுப்பு அவசியம் என அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளன. 

குறித்த 20 ஆம் அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூல வரைபானது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த சட்ட மூல வரைபானது அரசியலமைப்பின் 01, 03, 04 (டி), 12 (1), 14 (1) ஜி, 27(2), 27 (3) ஆகிய சரத்துக்களை மீறுவதாக அம்மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த திருத்தச் சட்ட மூல வரைபூடாக அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment