புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மன்னாரில் வாக்குரிமை வழங்க வேண்டும் - காதர் மஸ்தான் - News View

About Us

About Us

Breaking

Friday, September 25, 2020

புத்தளத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு மன்னாரில் வாக்குரிமை வழங்க வேண்டும் - காதர் மஸ்தான்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) 

புத்தளத்தில் தற்காலிகமாக இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம் மக்களுக்கு மன்னாரிலேயே வாக்குரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நிதி ஆணைக்குழு செயற்திட்ட அறிக்கை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிகமாக புத்தளத்தில் வசித்துவரும் மக்களின் வாக்குரிமையை அவர்களின் சொந்த மாவட்டமான மன்னாரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தேர்தல் ஆணைக்குழுவானது அவர்களை புத்தளம் மாவட்டத்திலேயே தேர்தல் இடாப்பில் பதிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் தெரிவித்து வருகின்றனர். 

மனிதாபிமான ரீதியில் அம்மக்கள் தொடர்பில் சிந்தித்து அவர்களுக்கு மன்னார் மாவட்டத்திலேயே வாக்குரிமைகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை நிராகரிப்பது அவர்களின் உரிமையை மீறும் செயலாகும். 

மேலும் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ் தமது கொள்கை பிரகடன உரையின்போது, நாட்டில் அனைத்து மக்களுக்கும் காணி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். 

இடம்பெயந்து வாழும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். அவர்களுக்கு காணி உறுதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டிருந்தார். தென்னிலங்கை மக்களுக்கு மட்டுமன்றி, அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இது அமைந்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment