பொலிஸ் மா அதிபரை அரசியலமைப்பு பேரவையே நியமிக்க வேண்டும் - தலதா அத்துகோரல - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

பொலிஸ் மா அதிபரை அரசியலமைப்பு பேரவையே நியமிக்க வேண்டும் - தலதா அத்துகோரல

(செ.தேன்மொழி) 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாகவே பொலிஸ் மா அதிபரை நியமிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில், அரசியலமைப்பு பேரவையே நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் காரணமாக ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியடையவில்லை. இந்த திருத்தமானது மக்களுக்கு நலனை பெற்றுக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாகும். 

19 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைபாட்டின் காரணமாகவே இதுவரையிலும் பொலிஸ் மா அதிபரொருவரை நியமிக்க முடியாமல் இருக்கின்றது என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொலிஸ் மா அதிபரின் நியமனத்தை பொலிஸ் ஆணைக்குழு வழங்காது. அதனை அரசியலமைப்பு பேரவையே வழங்க வேண்டும். 

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் அவரது பதவிக் காலம் முடிவுறுவதற்கு முன்னர் அவருக்கு எதிராக குறச்சாட்டு முன்வைக்கபட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததினால், தற்காலிகமாக ஒருவரை நியமிக்க வேண்டி ஏற்பட்டது. அதனாலேயே பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி பொலிஸ் மா அதிபர் நியமனத்திற்காக ஒருவரை பெயரிட்டால், அவர் தொடர்பில் அரசியலமைப்பு பேரவை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்கும். எதற்காக ஜனாதிபதி அது தொடர்பில் முடிவெடுக்காமல் இருக்கின்றார் என்பது எமக்கு தெரியாது. சிலவேளை பொலிஸ் சேவையில் ஓய்வு பெற்ற ஒருவரையோ அல்லது ஆணையாளர் ஒருவரையோ பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளாரா என்பது தொடர்பில் தெரியவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad