மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை, சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் - அனுசா சந்திரசேகரன் - News View

About Us

About Us

Breaking

Monday, August 31, 2020

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை, சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன் - அனுசா சந்திரசேகரன்

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை -அனுசா சந்திரசேகரன் – GTN
மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை. தேசிய சபையின் முடிவு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் அனுசா சந்திரசேகரனை கட்சியில் இருந்து வெளியேற்றியமை தொடர்பில் இன்று (31) மாலை தலவாக்கலையில் வைத்து ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபையால் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நானும் தேசிய சபையில் அங்கம் வகிக்கின்றேன், கூட்டம் தொடர்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனது தந்தையின் ஆதரவாளர்களும் தேசிய சபையில் இருக்கின்றனர்.

அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களுக்கு அழைப்பு விடுத்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தனித்துவ அடையாளத்தை நிரூபிக்கும் நோக்கிலேயே பொதுத் தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கினேன். அதனை செய்தும் காட்டினேன். மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.

மக்கள் என்பதே மலையக மக்கள் முன்னணி, என்னை கட்சியைவிட்டு சாதாரணதொரு குழுவால் தீர்மானிக்க முடியாது. மக்கள் எனது பக்கமே இருக்கின்றனர், அவ்வாறு இல்லாவிட்டால் எனக்கு 17 ஆயிரத்து 107 வாக்குகள் கிடைத்திருக்காது.

மலையக மக்கள் முன்னணியின் நிதி அறிக்கை எங்கே? தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய கோட்டா பணம் வழங்கப்பட்டதா, அமைப்பாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்பட்டதா, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதா, அவற்றை சுட்டிக்காட்டினால் பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். அது மக்கள் தொடர்பாகவும், சட்டரீதியாகவும் இருக்கும்.

மலையக மக்கள் முன்னணி மண் வெட்டி சின்னத்தில் களமிறங்கியிருந்தால், நான் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால் தான் கட்சி யாப்பை மீறுவதாக அமையும். எனவே, நான் யாப்பை மீறவில்லை என அனுசா சந்திரசேகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment