எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க முடியாது - இராதாகிருஷ்ணன் - News View

Breaking

Post Top Ad

Sunday, August 23, 2020

எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க முடியாது - இராதாகிருஷ்ணன்

எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க முடியாது
"எந்த கொம்பன் வந்தாலும் மலையக மக்களின் மாபெரும் அரசியல் இயக்கமான தமிழ் முற்போக்கு கூட்டணியை அழிக்கவே முடியாது." என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நேற்று (23) மதியம் ஹட்டன் நகரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் போட்டியிட்டோம். அதில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளாக எமது மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்தோம். அவற்றை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்தோம். எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்.

கொழும்பிலும், கண்டியிலும், பதுளையிலும், நுவரெலியாவிலும் வாக்குகளை சிதறடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி நூறுவீத வெற்றியை பெற்றுள்ளது. எம்.பியாக இருந்த எவரும் தோல்வியடையவில்லை. எனவே, எமது மக்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்கு உரிய வகையில் சேவைகள் தொடரும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியாக பயணித்து எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம். எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்கமுடியாது." - என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment

Post Bottom Ad