'காணாமல் போனவர்கள் குறித்து கெஹேலியவின் கருத்திற்கு விளக்கம் கோரப்பட வேண்டும்' : சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் - News View

Breaking

Post Top Ad

Monday, August 31, 2020

'காணாமல் போனவர்கள் குறித்து கெஹேலியவின் கருத்திற்கு விளக்கம் கோரப்பட வேண்டும்' : சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர்

செயலணி' என்ற பெயரில் இராணுவ மயமாக்கல்..!- யஸ்மின் சூக்கா | NewUthayan
(நா.தனுஜா)

இலங்கையில் காணாமல் போனவர்களில் அரைவாசிப்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றார்கள் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெரிய ரம்புக்வெல வெளியிட்டிருக்கும் கருத்து, காணாமல் போனோரின் குடும்பத்தினர் அனுபவித்துவரும் முடிவற்ற துன்பங்களை நிராகரித்து அவர்களை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஆதாரமற்றதொரு கருத்தாகும். இது குறித்து அவரிடம் முறையான விளக்கம் கோரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, ஏழாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது பற்றி கவலைகொள்ளாமல் இருப்பது எப்படி சாத்தியம் என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இடைக்கால நீதிப்பொறிமுறை ஒன்று இருப்பதாக நம்பும் சர்வதேச சமூகம் நீதியைக் கோரும் குடும்பங்கள் தொடர்பில் ஒரு தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. புதிய அரசாங்கத்திற்கான தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் புதிய அரசியல்வாதிகளுடனும் ஜெனரல்களுடனும் கைகுலுக்குவதற்காக வரிசையில் நிற்பதற்குப் பதிலாக, காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களது துணிச்சல் மிக்க சட்டவாளர்களின் கோரிக்கைகளைப் பாதுகாப்பதற்காக கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் தொடர்ச்சியான ஆதரவினை வெளிக்காட்டுவதற்கு முன்வர வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியிருக்கிறார்.

மேலும், இலங்கையில் காணாமல் போனோர் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்கான தேடலில் ஈடுபட்டமைக்காக இளம் தமிழ் செயற்பாட்டாளர்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் 15 பேருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய இராச்சியத்தில் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டிருக்கிறது.

'போர் முடிவடைந்த பின்னர் ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக தமது உடன்பிறப்புக்கள் காணாமல் போனமை தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரியவர்கள், அதற்காக மிகப்பயங்கரமான விலையைக் கொடுத்திருக்கிறார்கள்' என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். 

'தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை மாத்திரம் அறிய விரும்பியவர்களை தொடர்ந்தும் வெள்ளை வேனை அனுப்பித் துன்புறுத்த முடியாது என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்' என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad