நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகள் அறநெறி பாடசாலை கல்வியை கற்காதவர்களினாலேயே ஏற்படுகின்றன - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகள் அறநெறி பாடசாலை கல்வியை கற்காதவர்களினாலேயே ஏற்படுகின்றன - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அறநெறி பாடசாலை கல்வியை ...
(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பயங்கரவாத செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு மதம் சார்ந்த கல்வியே பங்களிப்பு செய்கிறது. நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகள் அறநெறி பாடசாலை கல்வியை கற்காதவர்களினாலேயே ஏற்படுகின்றன. இதனால் அறநெறி பாடசாலை கல்வியை கட்டாயப்படுத்த வேண்டியது அவசியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கசாகல விகாரையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற 125ஆவது அறநெறி பாடசாலை தினத்தின் தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், பௌத்த அறநெறி பாடசாலைகள் எமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். கல்விக்காக எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிஷனரி கல்வி முறை எமது நாட்டின் பௌத்த கல்வியின் அழிவிற்கு வழிவகுத்தது. 

பௌத்த அறநெறி பாடசாலை வேலைத்திட்டம் இந்நாட்டில் நிறுவப்பட்ட ஒரு சிறந்த திட்டமாக காலி வெலிவத்த ஸ்ரீவிஜயானந்த அறநெறி பாடசாலை 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட அறநெறி பாடசாலைக்கு அரச அனுசரணையின் கீழ் அறநெறி பாடசாலை பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 1956ஆம் ஆண்டு பௌத்தாகமத்திற்கு விசேட இடம் வழங்கப்பட்டது.

இலங்கையில் 22 - 23 இலட்சம் பிள்ளைகள் அறநெறி பாடசாலை கல்வி கற்று வருகின்றனர். அது தொடர்பில் ஒரு வகையில் பெருமை கொள்ள முடியும். மதிப்பு மிகுந்த பிள்ளைகளை நாட்டிற்கு அர்ப்பணிக்க அறநெறி பாடசாலை முறையை எமது நாட்டில் முன்னெடுத்து வருகின்றமை தொடர்பில் மதிப்புமிகுந்த மஹாசங்கத்தினர் மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும். எவ்வித ஊதியமும் இன்றி மஹாசங்கத்தினர் உள்ளிட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் செய்யும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்க விடயமாகும்.

பிக்குமார்களினால் செய்யப்படும் இந்த வேலையைப் பாராட்டாவிடின் அதுவொரு குறையாகிவிடும். இன்று நம் நாட்டில் இடம்பெறும் பெரும்பாலான சீரழிவுகள் அறநெறி பாடசாலை கல்வியை கற்காதவர்களினாலேயே ஏற்படுகின்றன. எனவே, அறநெறி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

எமது பிள்ளைகளில் அறநெறி பாடசாலைக்கு செல்வோரின் எண்ணிக்கையை நோக்கும்போது பாரிய எண்ணிக்கையிலானோர் பௌத்த கல்வியை கற்பதில்லை. வாரத்திற்கு 30 அல்லது 45 நிமிடங்கள் பௌத்த கல்வியை கற்பிக்கின்றோம் என நாம் மகிழ்ச்சியடைந்தால் அது தவறாகும்.

பிள்ளைகளை அறநெறி பாடசாலைகளில் இணைப்பதன் ஊடாக நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை நாட்டிற்கு வழங்க முடியும். இதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அறநெறி பாடசாலை முறையை மேலும் மேம்படுத்தும் வகையில் அறநெறி பாடசாலை கல்வி, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அதற்கான அமைச்சரொருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அது அறநெறி பாடசாலையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு படிமுறையாகும்.

நாட்டின் எதிர்கால அனைத்து நடவடிக்கைகளையும் மஹாசங்கத்தினரின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ள நாம் நடவடிக்கை எடுப்போம். ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அது குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். நாம் அறநெறி கல்வியை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன்மூலம் அறநெறி கல்வி மாத்திரமின்றி நல்லொழுக்கம் கொண்ட குழந்தை செல்வங்களை உருவாக்குவதும் எமது பொறுப்பாகும்.

பௌத்த கல்வி மாத்திரமன்றி ஏனைய மதங்களை சேர்ந்த பிள்ளைகளும் தங்களது சமயத்தை கற்பதற்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சில மதங்கள் சமயத்தை மட்டுமே கற்பிக்கின்றன.

அண்மைய காலங்களில் நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பயங்கரவாதம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதுபோன்ற அனைத்தையும் இல்லாதொழிப்பதற்கு மதக் கல்வியே மிகவும் பங்களிப்பு செலுத்துகிறது. எந்த மதமும் வன்முறையை கற்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment