முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள உசைன் போல்ட், சனிக்கிழமை தனக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆயினும் தனக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், தான் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், (அந்நாட்டு) சுகாதார அமைச்சின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது 34ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை (21) மிக விமர்சையாக கொண்டாடிய, ஜமைக்க நாட்டு வீரர் உசைன் போல்ட், அக்கொண்டாட்டத்தில் மன்செஸ்டர் சிற்றி கழகத்தின் நட்சத்திரம் ரஹீம் ஜ்டேர்லிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எவ்வித சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை எனத் தெரிவித்து சமூக ஊடகங்களில் பலரும் விசனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் அடிப்படையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தை அடுத்து சனிக்கிழமை கொவிட்-19 சோதனையை மேற்கொண்ட உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment