மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனின் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, பிரதமரிடம் அல்லவா கேட்க வேண்டும்? - News View

About Us

About Us

Breaking

Monday, August 24, 2020

மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமெனின் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி, பிரதமரிடம் அல்லவா கேட்க வேண்டும்?

கருணா அம்மான் பொதுஜன பெரமுன கட்சி ...
(நா.தனுஜா)

மாகாண சபைத் தேர்தல்களை பிற்போடுவதற்கு ஏதுவான வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு ஆதரவளித்து மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கு தடையேற்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், உண்மையில் தேர்தலை நடத்த வேண்டுமெனின், அதுகுறித்து பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அல்லவா கேட்க வேண்டும்? என்றும் கேள்வியெழுப்பினார்.

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது உலகலாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, பிரேஸில், இந்தியா போன்ற நாடுகளில் மிக உயர்வாகக் காணப்படுகின்றன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை இந்த நெருக்கடி நிலையை அரசாங்கம் சிறப்பாகக் கையாண்டதன் ஊடாக, தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. 

பொதுத் தேர்தலை நடத்துவதால் கொரோனா வைரஸ் வெகுவாகப் பரவும் என்று கடந்த காலத்தில் பலரும் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர். எனினும் தேர்தல் முடிவடைந்து இரு வார காலமாகியும் தற்போது வரையில் தேர்தல் நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக எந்தவொரு நோயாளியும் பதிவாகவில்லை.

அதேபோன்று மறுபுறம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது கடந்த அரசாங்கத்தினால் எவ்வாறு காலந்தாழ்த்தப்பட்டது என்பதை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். 

அவற்றைப் பிற்போடுவதற்கு ஏதுவான வகையில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என்று சட்டமா அதிபர் தெரிவித்ததையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக வாக்களித்து மாகாண சபைத் தேர்தல்களைப் பிற்போடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

அவ்வாறிருக்கையில் இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருவது வேடிக்கையாக இருக்கின்றது. உண்மையில் தேர்தலை நடத்த வேண்டுமெனின், அது குறித்து பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அல்லவா கேட்க வேண்டும்?

அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பெற முடியாமல் போயிருக்கிறது. கடந்த பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கூட்டமைப்பு இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றது. 

எனவே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத்தை மையப்படுத்திய நாட்டைப் பிரிக்கும் நோக்கிலான அரசியலை தெற்கில் இருப்பவர்கள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் இப்போது நிராகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. 

எனவே உண்மையில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது கோரிக்கைகள் இருப்பின் அவை பற்றி பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் பேச வேண்டும் என்று கூட்டமைப்பை வலியுறுத்துகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment