ஜனாஸா தொழுகையின் பின் உடல் தகனம் - சுகாதார தரப்பினருடன் பேசியும் பலனளிக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

ஜனாஸா தொழுகையின் பின் உடல் தகனம் - சுகாதார தரப்பினருடன் பேசியும் பலனளிக்கவில்லை

இந்தியாவிலிருந்து கடந்த 20 ஆம் திகதி நாடு திரும்பிய பெண்ணொருவரே (47 வயது) உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குறித்த பெண் நேற்று (23) உயிரிழந்துள்ளார். குறித்த பெண், இருதய நோய் மற்றும் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். 

இவருக்கு ஏற்பட்ட இருதயக்கோளாறே மரணத்திற்கான காரணம் எனவும் வைத்திய நிபுணர் கூறியுள்ளார். உயிரிழந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் நேற்று பிற்பகல் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இடம்பெற்றன.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ள இராணுவம், குறித்த பெண் மாவத்தகமையைச் சேர்ந்தவர் எனவும் 20 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கை வந்த இவர், இரணவில தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

இவருக்கு கொரோனா தொற்றியது உறுதியான நிலையில் கடந்த 22 ஆம் திகதி தொற்று நோய் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

6 மாதங்களுக்கு முன்னர் புற்று ​நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு இவர் இந்தியா சென்றுள்ளதோடு நீரிழிவுக்கும் சிகிச்சை பெற்று வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரின் இறுதிக் கிரியைகள் கொடிகாவத்தை பொது மயானத்தில் இடம்பெற்றது. அவரின் கணவர் தனியார் ஹோட்டலொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மனைவியின் இறுதிக் கிரியையில் பங்கேற்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் இராணுவம் தெரிவித்தது.

இதன்படி நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இஸ்லாமிய முறைப்படி இறந்த பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் குடும்ப உறவினர்கள் சிலரும் அவரின் கணவரும் இதில் கலந்து கொண்டதாகவும் இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சடலம் தகனம் செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் சாம்பல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அது மையவாடியொன்றில் புதைக்கப்பட்டதாகவும் அறிய வருகிறது.

கடந்த ஜூன் முதலாம் திகதி நாட்டில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது தெரிந்ததே.

இதேவேளை உயிரிழந்த பெண்ணின் சடலத்தை புதைப்பது தொடர்பில் தலையிடுமாறு அவரது உறவினர்கள், அமைச்சர்களான அலி சப்ரி ஜோன்ஸ்டன் பெர்ணாந்து மற்றும் முஸ்லிம் எம்.பிகளுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது பற்றி அவர்கள் சுகாதார தரப்பினருடன் பேசியதாக அறிய வருகிறது. ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை என இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment