
அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கான உத்தரவை ஜனாதிபதி டிரம்ப் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து டிக்டொக் நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப் போரில் தொடங்கிய அமெரிக்க - சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.
இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.
மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டொக் செயலியை தங்கள் நாட்டிலும் தடை விதிக்க அமெரிக்கா தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் டிக்டொக்கின் தாய் நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
இதனால் டிரம்ப் தடை விதிக்கும் முன்னரே டிக்டொக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்யும் முயற்சியில் பைட் டான்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதற்காக அமெரிக்காவின் மைக்ரோசொப்ட், டுவிட்டர், ஒரகல் போன்ற நிறுவனங்களுடன் டிக்டொக் நிறுவனம் பேச்சுவாத்தையில் ஈடுபட்டு வருகிறது.
டிக்டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனம் வாங்கினால் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் ஒருவேளை டிக்டொக் செயலி தங்கள் நாட்டு நிறுவனத்திற்கு விற்கப்படவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த செயலி அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனால் மைக்ரோசொப்ட், டுவிட்டர் போன்ற நிறுவனங்களுடன் டிக்டொக் நிர்வாகம் தொடர்ந்து தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையில், ஜனாதிபதி டிரம்ப் கடந்த 14 ஆம் திகதி பிறப்பித்த மற்றுமொரு உத்தரவில் டிக்டொக்கின் உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடமே ஒப்படைக்க தாய் நிறுவனமான பைட் டான்ஸ் விதிக்கப்பட்ட அவகாசம் 90 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், செப்டம்பர் 15 முதல் அமெரிக்காவில் டிக்டொக் செயலியின் பரிவர்த்தனைகள் அனைத்தும் தடை செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின் டிக்டொக் செயலியின் பரிவர்த்தனைகளுக்கு தடை விதிப்பதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 6 ஆம் திகதி வெளியிட்ட சிறப்பு உத்தரவை எதிர்த்து டிக்டொக் நிர்வாகம் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் ஜனாதிபதி டிரம்பின் தடை உத்தரவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தில் டிக்டொக் நிர்வாகம் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி டிரம்பின் முடிவை எதிர்த்து டிக்டொக் செயலி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதால் அமெரிக்க அரசியல், வர்த்தக துறைகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment