
மன்னார் - சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த மரணம் தொடர்பில் உயிரிழந்த யுவதியின் குடும்ப உறவு பெண் ஒருவர் உட்பட இரண்டு பெண்கள் மன்னார் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதி யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்டவர்களில் உயிரிழந்த யுவதியின் இரத்த உறவினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் - சௌத்பார் புகையிரத நிலைய பிரதான பாதை அருகில் காணப்படும் உப்பளத்திற்கு சொந்தமான உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த 13 ஆம் திகதி பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்டவர் பெண் என அடையாளம் காணப்பட்டதோடு, குறித்த பெண்ணின் சடலம் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து சடலம் தொடர்பில் மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.
அன்றைய தினம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிசார், சடலத்தை மீட்டு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் சடலம் அடையாளம் காண்பதற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் புலன் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். அதன்படி, குறித்த யுவதியின் சடலம் அடையாளம் காண வைக்கப்பட்டது. எனினும் குறித்த யுவதி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாமென்ற சந்தேகம் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த யுவதியின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொண்ட புலன் விசாரனைகளுக்கு அமைவாக இரண்டு யுவதிகள் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பொலிஸாருடன், விசேட புலனாய்வு பிரிவு அணியொன்று இணைந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சேர்ந்த சுமார் 21 வயதுடையவர் என தெரிய வருகிறது.
யுவதியின் உறவு முறையான பெண்ணும், இன்னொரு பெண்ணும் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் நெடுந்தீவைச் சேர்ந்த குறித்த யுவதியின் மரணத்துடன் தொடர்பு பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் மன்னாரைச் சேர்ந்த சிலரையும் மன்னார் பொலிஸார் தேடி வருகின்றனர்.
சம்பவ தினத்தில் நெடுந்தீவை சேர்ந்த கொலையான யுவதியை, கைதான இரண்டு பெண்களும் மன்னாரிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் விசாரணை மூலம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர் லெம்பட்
No comments:
Post a Comment