புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன்

தென்னிலங்கையுடன் ...
(எம்.மனோசித்ரா)

புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வுகளை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பையும் உடைத்தெறிய நினைக்கும் அரசாங்கத்தை எதிர்த்து செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் தமிழ் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலொ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ள சரத் வீரசேகர தனது பதவியேற்பு நிகழ்வில் 13, 19 ஆம் திருத்தங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து கனவு காண வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இது தொடர்பான நிலைப்பாட்டை வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவியேற்றிருக்கும் அரசாங்கம் 13, 19 ஐ நீக்குவது மாத்திரமல்ல. வடக்கிலும் கிழக்கிலும் முழுமையாக தடம் பதிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக முன்னெடுக்கும். 

இதற்காக வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீகத்தை முற்றாக உடைத்தெறிவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்துள்ள இந்த அரசாங்கத்தை எதிர்ப்பதற்கான வல்லமையை எதிர்த்தரப்பினர் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒருமித்த கொள்கையின் அனைத்து தமிழ் பிரிதிநிதிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்து செயற்படாத பட்சத்தில் இவர்களை எதிர்த்து செயற்படுவது சவாலாக அமையும்.

அபிவிருத்தியைக் காண்பித்து இனப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான செயற்பாடுகளையே இந்த அரசாங்கம் முன்னெடுக்கும். இதற்காக மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படக் கூடும். எனவேதான் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

அனைவரும் ஒன்றிணையும் பட்சத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பலமாகச் செயற்பட முடியும். எனவே இதற்கு அனைவரும் ஒன்றிணைய ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment