ஜனாதிபதியை பதவி விலகக்கோரி பெலாரஸ் நாட்டில் தீவிரமடையும் போராட்டம் - ’எங்களுக்கு பயம் இல்லை’ எதிர்க்கட்சி தலைவர் அதிரடி கருத்து - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

ஜனாதிபதியை பதவி விலகக்கோரி பெலாரஸ் நாட்டில் தீவிரமடையும் போராட்டம் - ’எங்களுக்கு பயம் இல்லை’ எதிர்க்கட்சி தலைவர் அதிரடி கருத்து

பெலாரஸ் போராட்டம்
பெலாரஸ் நாட்டில் நீண்ட காலமாக ஜனாதிபதி லூகாஷென்கோ பதவி விலகக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருங்கிணைந்த சோவியத் ரஷியாவில் இருந்து 1991 ஆம் ஆண்டு பிரிந்து பெலாரஸ் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அந்நாட்டில் 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் அலெக்சாண்டர் லூகாஷென்கோ வெற்றி பெற்றார். அதன் பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அந்நாட்டில் கடந்த 9 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலெக்சாண்டர் 80.23 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் அலெக்சாண்டர் 6-வது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பிரதான எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா சிகானெஸ்கயா 8.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் வெளியான முடிவுகள் மோசடியானவை என பொதுமக்களும், எதிர்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மேலும், அலெக்சாண்டர் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஜனாதிபதி அலெக்சாண்டர் நிராகரித்தார்.

எதிர்கட்சி தலைவரான ஸ்வியாட்லானா தேர்தலில் ‘‘பெரும்பான்மை எங்களுக்குத்தான். இதை நான் நம்புகிறேன். பேராட்டக்காரர்களுக்கு எதிரான அடக்குமுறை அவமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.

போராட்டம் அதிகரித்ததையடுத்து, பெலாரஸ் நாட்டின் எல்லைகள் வலுப்படுத்தப்பட்டன. ரஷியா மற்றும் ஐரோப்பாவின் மற்ற நாடுகளை இணைக்கும் நாடுகளில் பெலாரசும் ஒன்று.

பெலாரசில் தற்போது நடைபெற்ற தேர்தலில் அலெக்சாண்டர் வெற்றி பெற்று 6-வது முறையாக ஜனாதிபதியானதாக அறிவிக்கப்பட்டதற்கு பல ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அந்நாடுகள் எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் ஒடுக்கப்பட்டு வருவதால் ஸ்வியாட்லானா லிதுவேனியா நாட்டிற்கு சென்றுவிட்டார். அங்கிருந்தவாறு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். 
தீவிரமடையும் பெலாரஸ் போராட்டம் - ’எங்களுக்கு பயம் இல்லை’ எதிர்கட்சி தலைவர் அதிரடி கருத்து
இந்நிலையில், 37 வயது நிரம்பிய முன்னாள் ஆங்கில ஆசிரியையான எதிர்கட்சி தலைவர் ஸ்வியாட்லானா செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது அலெக்சாண்டர் எங்களிடம் அரசாங்கத்தை அமைதியாக ஒப்படைக்க வேண்டும். அவருக்கு வேறு வழி இல்லை. அவர் பேச்சுவார்த்தைக்கு விரைவாக வர வேண்டும். பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம். நாட்டின் எல்லையில் உள்ள பாதுகாப்பு படையினரை அதிகப்படுத்துவது நாட்டுக்குள் நிலவி வரும் அரசியல் பிரச்சினையில் இருந்து திசை திருப்பும் நடவடிக்கை.

26 ஆண்டுகால பயத்திற்கு பின்னர் பெலாரசின் மக்கள் பயத்தை விடுத்து அவர்களது உரிமைக்காக போராட தயாராகி விட்டனர். அதை நினைத்து நான் பெருமைபடுகிறேன்.

போராட்டக்காரர்கள் போராட்டங்களை கைவிட வேண்டாம். உரிமைகளை பெற நடைபெறும் இப்போராட்டத்தில் நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இது ஒன்றும் போராட்ட குழு இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெலாரசின் மக்கள் நாங்கள் தான். நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் இனி எதற்கும் பயப்படப்போவதில்லை’ என்றார்.

No comments:

Post a Comment