
(இராஜதுரை ஹஷான்)
பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை நிச்சயம் பெறும். எமது வெற்றியில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் பங்குவகிக்க வேண்டும். இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டதாக முரண்பாடற்ற விதத்தில் வழங்கப்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், 16ஆவது பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை நிச்சயம் பெறும்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் பெருமளவிற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுவும் அண்மை காலங்களில் இனங்களுக்கிடையில் விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணியாக அமைந்தது.
பொதுஜன பெரமுனவின் வெற்றியில் தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் பங்குகொள்ள வேண்டும். நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு அடிப்படை பிரச்சினை காணப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரச்சினைகளுக்கு அரசியல் காரணிகளை கொண்டு ஒருபோதும் தீர்வு காண முடியாது.
வடக்கு மக்களின் அடிப்படை அதாவது அரசியல்சார் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினை மையப்படுத்தி தீர்வு காண முயலும்போது, தெற்கில் முரண்பாடுகள் தோற்றம் பெறுகிறது.
அரசியல்வாதிகளும் பிரச்சினைகள் எழும் விதத்திலான தீர்வு திட்டங்களையே இதுவரை காலமும் முன்வைத்துள்ளார்கள். ஆகவே எத்தரப்பினருக்கும் முரண்பாடற்ற விதத்தில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் முரண்பாடுகள் தோற்றம் பெறாத விதத்திலும் வழங்கப்படும். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அனைத்து இன மக்களுகும் சமமாக மதிக்கப்படுவார்கள்.
அபிவிருத்திகள் அனைத்து தரப்பினருக்கும் தாராளமயப்படுத்தினால் முரண்பாடுகள் தோன்றும் கேள்விகள் ஒருபோதும் எழாது. ஆகவே தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் பொதுஜன பெரமுனவின் வெற்றியை பலப்படுத்த வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment