பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு! - News View

Breaking

Post Top Ad

Tuesday, August 25, 2020

பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!

பொதுமக்களுக்கு இராணுவத் தளபதி ...
(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் பணிகள் ஒருபோதும் இடைநிறுத்தப்படமாட்டாது. எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுத்தாலும் எமது நாட்டு பிரஜைகள் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர். இவ்வாறன சூழலில் இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தம்புள்ளையில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் சமூகப்பரவல் ஏற்படவில்லை. எனினும் உலகலாவிய ரீதியிலான நிலைமையை அவதானிக்கும் போது எமது நாட்டில் முழுமையாக கொரோனா ஒழிக்கப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. தினமும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

அழைத்து வரப்படும் பெரும்பாலானவர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்படுகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளிலேயே இலங்கையர்கள் பெருமளவில் உள்ளனர். அந்நாடுகளிலிருந்தே அதிகளவானவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

கடந்த வாரம் உயிரிழந்த பெண் இந்தியாவிலிருந்து வருகை தரும் போதே அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கே தொற்று ஏற்படுகிறது. இலங்கையில் அல்ல. எவ்வாறிருப்பினும் வெளிநாடுகளிலில் சிக்கித்தவிக்கின்ற இலங்கையர்களை நாம் நாட்டுக்கு அழைத்துவர வேண்டும். அவர்கள் எம் நாட்டு பிரஜைகளாவர். இதுவரையில் சுமார் 30000 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முப்படையினரால் 54 தனிமைப்படுத்தல் நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 7000 பேர் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் செயற்திட்டத்தை அரசாங்கம் கைவிடப்போவதாக சிலர் கூறுகின்றனர் அது உண்மைக்கு புறம்பான கருத்தாகும். 

தற்போது நாளொன்றுக்கு சுமார் 250 - 300 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விமானத்தில் அழைத்து வரப்படும் போது தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகிறது. அவர்களிடமிருந்து சமூக தொற்று ஏற்படாமல் தடுப்பது எமது பொறுப்பாகும்.

நாட்டுக்கு அழைத்து வரப்படும் இலங்கையர்கள் ஹோட்டல்களிலும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் தங்க வைக்கப்படுகின்றனர். கொரோனா காலத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே ஆரம்பத்தில் சுமார் 100 அறைகள் காணப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான வாய்ப்பளிக்கப்பட்டது.

தற்போது 40 - 50 அறைகளைக் கொண்ட ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் இதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு முயற்சிக்கின்றோம். காரணம் அவர்களும் தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்பளிக்கப்பட வேண்டும். பொருளாதார நிலைமையில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

எவ்வாறிருப்பினும் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. ஆனால் இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியேற்படும். ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் சிறு தவறு ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே நாட்டிலுள்ள மக்கள் அவரவர் பாதுகாப்பில் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

நாட்டில் கொரோனா தோற்கடிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மத்தியில் நம்பிக்கை தோன்றியிருக்கக்கூடும். அவ்வாறு உறுதிப்படுத்த முடியாது. இது ஒரு வைரஸாகும். எப்போதும் முற்றாக அழியும் என்று கூற முடியாது. கொரோனாவை முற்றாக ஒழிக்க 2 வருடங்களேனும் செல்லும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலைமையின் கீழ் ஒவ்வொரு தனி மனிதனும் தம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad