
(நா.தனுஜா)
புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு செயன்முறைகள் நாட்டின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், இதன் காரணமாக வரலாற்றில் முதற்தடவையாக வெளிநாடுகளிடம் பெற்ற கடன்களை உரிய வேளையில் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையாகச் சாடியிருக்கிறார்.
கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடி நிலையைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் மிகப்பாரிய பின்னடைவைச் சந்திக்கும் நிலையேற்பட்டிருக்கிறது. அதேவேளை கடந்த 2019 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட புதிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிக் குறைப்புக்களும் அரச வரிவருமானத்தை வீழ்ச்சியடையச் செய்தன.
இந்நிலையில் வெளிநாடுகளிடம் இருந்தும் சர்வதேச அமைப்புக்களிடம் இருந்தும் இலங்கை பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதற்குப் போதுமான நிதி அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்த்தரப்பு தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டிவருகின்றது. இவ்வாறானதொரு நிலையிலேயே சம்பிக்க ரணவக்க இவ்விடயம் தொடர்பில் செய்திருக்கும் டுவிட்டர் பதிவொன்றில் அரசாங்கத்தைச் சாடியிருக்கின்றார்.
அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது இவ்வாண்டுக்கான அரசாங்கத்தின் வருமானம், கடன்களுக்கான வட்டியை மீளச் செலுத்துவதற்கே போதுமானதாக இருக்காது. இதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக அரசாங்கம் பெற்ற கடன்களை உரிய திகதிக்குள் முழுமையாக மீளச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத் தொடக்கத்தில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவற்ற வரிக்குறைப்பு இத்தகையதொரு நிலை ஏற்படுவதற்கான தூண்டுதலாக அமைந்ததுடன், அதனைத் தொடர்ந்து கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மூடப்பட்டமையால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
No comments:
Post a Comment