எங்களை சீண்ட நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் - பழனி திகாம்பரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, August 23, 2020

எங்களை சீண்ட நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம் - பழனி திகாம்பரம்

எங்களை சீண்ட நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்
"எதிர்க்கட்சியில் இருந்தாலும் மலையக மக்களை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியாக போராடுவோம்." என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று ஹட்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே திகாம்பரம் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது "தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக பாடுபட்ட, பிரச்சாரங்களில் ஈடுபட்ட அதேபோல் வாக்களித்த மக்கள் என அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நான் எனது தந்தை, தாத்தாமாரின் போஸ்டர்களை ஒட்டி அனுதாப வாக்கு கேட்கவில்லை. குறைகூறும் அரசியலையும் முன்னெடுக்கவில்லை. கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுத்த சேவைகளை சுட்டிக்காட்டியே மக்கள் மத்தியில் வாக்கு கேட்டேன். எமது மக்களும் அங்கீகாரம் வழங்கினர்.

500 வீடுகள் கூட கட்டப்படவில்லை என சின்னப் பையன் ஒருவர் பாராளுமன்றத்தில் பேசுகின்றார். அந்த சின்ன பையனுக்கு கண் தெரிகின்றதா, காது கேட்கின்றதா என தெரியவில்லை. அவ்வாறு தெரிந்திருந்தால் பாராளுமன்றத்தில் அப்படியொரு உரையாற்ற வேண்டிய தேவை வந்திருக்காது. ஆனால் நாம் என்ன செய்தோம் என்பது மக்களுக்கு தெரியும்.

நாங்கள் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. ஆனால் எங்களை சீண்ட நினைத்தால் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்றது. அதனை வைத்து தேர்தல் முறையைக்கூட மாற்றலாம். அவ்வாறு மாற்றினால் அது மலையக பிரதிநிதித்துவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் வீதியில் இறங்கி முற்போக்கு கூட்டணியாக போராடுவோம்." என்றார்.

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment