ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 5, 2020

ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களியுங்கள்

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் ...
முன்னெப்பொழுதும் இந்நாடு எதிர்கொண்டிராத சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் இத் தேர்தல் நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழ்வது மக்களின் இறைமையை வாக்களிப்பின் மூலம் மக்கள் அதை வெளிப்படுத்துகின்றார்கள். யாராவது ஒருவருக்கு பணமும், பரிசில்களும், வானளாவிய வாக்குறுதிகளையும் வாக்களித்துவிட்டு போவோம் எனத் தேர்தலை துச்சமாக நினைக்க வேண்டாம். சாதி மதம் பார்த்து வாக்களிக்க வேண்டாம். பொருத்தமானவர் எனக் கருதுபவருக்கு வாக்களியுங்கள்"

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்றாகும். இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் முக்கியத்துவமான தேர்தல் இது என்று குறிப்பிட முடியும். அதற்கு பிரதான இரண்டு காரணங்கள் உள்ளன.

முதலாவது, உலகை ஆட்டிப்படைக்கும் கொவிட் - 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் இத் தேர்தல் நடைபெறுவதாகும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்கள் பூர்த்தியடைந்துவிட்டன. ஜனநாயக நாடொன்றில் மிக நீண்ட காலத்துக்கு பாராளுமன்றம் இல்லாமல் நாட்டை நிர்வகிக்க முடியாது.

அது ஜனநாயக பண்பும் இல்லை. இந்நிலையில் கண்டிப்பாக தேர்தல் நடத்தப்பட ​வேண்டும் என்ற இக்கெட்டான சூழலிலேயே தேர்தல் நடைபெறு கின்றது. மிக அதிகளவான சுகாதார பாதுகாப்புக்களுடன் நடத்தப்படுவதால் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. அதேபோன்று அரசியல் ரீதியாகவும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

இவ்வாறு முக்கியத்துவமான இத் தேர்தலில் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டியதே பிரதானமானதாகும். ஏனெனில் ஜனநாயக நாடொன்றில் இறைமையானது மக்களிடமே உள்ளது. அந்த இறைமையை கையளிக்கப்போகும் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் நாளே இன்றாகும். எனவே இன்று அனைத்து வாக்காளர்களும் தவறாது வாக்களிக்க வேண்டியது அவசியமாகும்.

நெருக்கடியான சூழலில் தேர்தல்
இன்று நடைபெறுகின்ற தேர்தலானது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறுகின்றது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நிறைவுற்ற பின்னர் பெப்ரவரி மாதம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.

அக் காலப் பகுதியிலேயே வேகமாக பரவி வந்த கொரோனா வைரஸ் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த தேர்தல் பிற்போடப்பட்டு நாடு முழுமையாக முடக்கப்பட்டது. இச் சூழலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா அல்லது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீள கூட்ட வேண்டுமா என்பதில் தொடர்பில் எழுந்த விவாதங்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று இரண்டாவது தடவையாகவும் தேர்தல் திகதி பிற்போடப்பட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை செய்யப்பட வேண்டியதில்லை என்று உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் தேர்தலுக்கான திகதியிடப்பட்டு இன்று தேர்தல் நடைபெறுகின்றது.

இத் தேர்தலில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் சுகாதாரத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் சுகாதார முறையில் வாக்களிக்கவும், உத்தியோகத்தர்கள் சுகாதார பாதுகாப்புடன் பணியாற்றவும் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே மக்கள் இன்று அச்சமின்றி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.

இத் தேர்தலில் நாடு முழுவதும் 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இவர்களில் 196 பேரை மக்கள் நேரடியாக தெரிவு செய்யவுள்ளார்கள். அந்தவகையில் இம் முறை 1,62,63,885 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். 225 பேரில் 196 பேர் தவிர்ந்த ஏனைய 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இத் தேர்தல் நடைபெறுகின்றது. அதேநேரம் நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் 160 தேர்தல் தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகின்றது. 25 மாவட்டங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஒரு தேர்தல் மாவட்டமாகவும், வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் வன்னித் தேர்தல் மாவட்டமாகவும் காணப்படுகின்றன.

அரசியல் ரீதியாக முக்கியத்துவம்
கொரோனா அச்சுறுத்தல் சூழலில் நடப்பதால் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதேபோன்று அரசியல் ரீதியாகவும் இத் தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந் நாட்டில் இதுவரை காலமும் ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுமே பிரதான பெரிய கட்சிகளாக போட்டியிட்டு மாறி மாறி ஆட்சி செய்து வந்துள்ளன. ஆனால் இம் முறை ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக பிளவுபட்டு சஜித் அணி, ரணில் அணி என பிரிந்த நிலையிலேயே போட்டியிடுகின்றன. அதேபோன்று இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இரண்டாகப் பிரிந்து சுதந்திரக் கட்சியாகவும் பொதுஜன பெரமுன என்பதாகவும் களத்தில் இறங்கியுள்ளன. பெரமுனவின் வேட்பாளராகப் போட்டியிட்டே கோட்டாபய ராஜபக்‌ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

தென்னிலங்கை நிலவரம் இவ்வாறிருக்க வடக்கு கிழக்கிலும் இதே நிலையே காணப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இதுவரை காலமும் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பும் பலவாறாக பிளவுபட்டு அதிலிருந்து பிரிந்து சென்றவர் ஒன்று சேர்ந்து தமிழ் மக்கள் தேசிய கூட்டணியாக போட்டியிடுகின்றனர். இதற்கு தமிழரசு கட்சி அறிமுகப்படுத்திய முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சீ்.வி.விக்கினேஸ்வரனே தலைமை வகிக்கிறார்.

அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களை சேர்ந்த 330 பேர் ஏழு ஆசனங்களுக்காக யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகின்றார்கள். வன்னி தேர்தல் தொகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் நிலைமைகள் இவ்வாறே காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில் மூவின மக்களிடையேயும் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது காணப்படுகின்றது.

வாக்களிக்கும் முறை
இத் தேர்தலில் வாக்காளர்கள் தாம் விரும்பிய கட்சிக்கு அல்லது சுயேச்சைக் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும். இதில் முதலில் தாம் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவுக்கு புள்ளடியிட்டுவிட்டு தாம் தெரிவு செய்த கட்சி அல்லது சுயேச்சை குழுவில் தாம் விரும்பிய மூன்று வேட்பாளருக்கு விருப்பு புள்ளடியிட முடியும்.

இங்கு வாக்காளர் தமது விருப்பு வாக்கினை ஒருவர், இருவர், மூவர் என்ற அடிப்படையில் வழங்க முடியும். அதேநேரம் விருப்பு வாக்கு அளிக்க விருப்பமில்லையாயின் வெறுமனே கட்சி அல்லது சுயேச்சை குழுவுக்கு மாத்திரம் புள்ளடியிட முடியும். ஆனால் கட்சி அல்லது சுயேச்சை குழுவுக்கு புள்ளடியிடாமல் விருப்பு வாக்கு அளிக்கப்படுமானால் அது செல்லுபடியற்ற வாக்காக கணிக்கப்படும்.

வாக்களிப்பது ஜனநாயக கடமை
எது எப்படியாக இருந்தாலும் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல் என்பது ஜனநாயக நாடொன்றின் பிரதான தவிர்க்க முடியாத அம்சமாகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தாம் விரும்பிய பிரதிநிதியை சுயாதீனமாக தெரிவு செய்வதற்கு வழங்கப்படும் சந்தர்ப்பமே பொதுத் தேர்தல். ஏனெனில் ஜனநாயக நாடொன்றில் இறைமையானது மக்களிடமே காணப்படுகிறது. மக்கள் தம்மிடம் உள்ள இறைமையை தேர்தல் மூலம் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கிறார்கள். இது தொடர்பாக எமது அரசியலமைப்பில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"இலங்கையில் இறைமை மக்களுக்குரியதாகவும், பாரதீனப்படுத்த முடியாததாகவும் இருக்கும். இறைமை என்பது ஆட்சித் தத்துவங்கள், அடிப்படை உரிமைகள், வாக்குரிமை ஆகியவற்றை உள்ளடக்கும்.

மக்களின் சட்டமாக்கற்றத்துவமானது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றத்தாலும், மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களாலும் பிரயோகிக்கப்பட வேண்டும்.

இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் ஆட்சித்துறைத் தத்துவம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட குடியரசு ஜனாதிபதியினால் பிரயோகிக்கப்படுதல் வேண்டும்." எனக் குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் தமது இறைமையை ஜனாதிபதி தேர்தல் மூலமாகவும், பாராளுமன்ற தேர்தல் மூலமாகவும் கையளிக்கின்றனர். எனவே இத் தேர்தலில் மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு செய்யாது விட்டால் மக்கள் விரும்பாத ஒர் தரப்பு பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட இடமுள்ளது.

அதேநேரம் மக்கள் இன்று வாக்களித்து தெரிவு செய்யும் பிரதிநிதிகளே எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இந் நாட்டை ஆளப்போகின்றார்கள். அவர்களின் மூலமே தமது உரிமைகளையும், பிரச்சினைகளுக்கான தீர்வினையும் பெற்றுக்கொள்ளப் போகின்றனர்.

பாராளுமன்றமே நாட்டினை நடத்திச் செல்கின்ற சபையாகும். எனவே இதன் பிரதிநிதிகளை மக்கள் தெரிவு செய்யும் போது மிகவும் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் நேர்மையானவர்களாகவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை, உரிமைகளை பெற்றுத்தரக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இதனையே பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக யாழ்.மறை மாவட்ட ஆயர் மற்றும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் ஆகியோர் தேர்தல் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலும் இக் கருத்தினையே வலியுறுத்தியுள்ளனர்.

எனவே வாக்காளர்கள் அனைவரும் இன்று நேர காலத்துடனே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று, உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, தமது ஜனநாயக கடமையை நிறைவேற்றி நிலையான, நீதியான ஒர் அரசாங்கத்தை அமைக்க உதவ வேண்டும்.

ரி. விரூஷன்

No comments:

Post a Comment