
அரசாங்கம் தமது பொதுத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரான கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை பயன்படுத்துகின்றமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கண்டனம் வெளியிட்டிருக்கிறார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் உரையாற்றிய சம்பிக்க ரணவக்க, கிளிநொச்சியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை கே.பி முன்னெடுத்துச் செல்வது முறையற்றது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு இந்தியாவினால் கே.பி மீது சுமத்தப்பட்டிருக்கிறது.
அவ்வாறிருக்கையிலேயே கே.பியும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான முன்னாள் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்காக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள் என்று சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.
அதுமாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இரகசிய டீல் ஒன்று காணப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், அவை தொடர்பில் பகிரங்கப்படுத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment