கரு தலைவரானால் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்கலாம் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

Breaking

Post Top Ad

Monday, August 24, 2020

கரு தலைவரானால் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து சிந்திக்கலாம் - திஸ்ஸ அத்தநாயக்க

திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் ...
(செ.தேன்மொழி)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கப்பட்டால், ஒன்றிணைந்து செயற்படுவது குறித்து அவர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பொறுப்பை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு வழங்க தீர்மானத்திருப்பதாக ஊடகங்கள் மாத்திரமே அறிவித்துள்ளன. கட்சியின் தலைவரோ, முன்னிலையில் உள்ள உறுப்பினர்களோ அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாக எமக்கு தெரியவரவில்லை. 

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பொதுத் தேர்தல் முடிவுகளின் பின்னர் தெளிவான தீர்மானத்தில் இருக்கின்றார். அதற்கமைய நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ள தீர்மானத்தினை கருத்திற்கொண்டு தொடர்ந்தும் தொலைபேசி சின்னத்தில் பயணிப்பது தொடர்பிலே அவர் தீர்மானம் எடுத்துள்ளார். அவ்வாறு செயற்படவே நாங்களும் விரும்புகின்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் நாங்கள் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் கரு ஜயசூரியவுக்கு பெற்றுக் கொடுக்கப்படுமா ஆனால், அவருடன் எமக்கு எவ்வித தனிப்பட்ட குரோதமும் கிடையாது. அவர் தலைமைத்துவ பொறுப்புக்கு பொருத்தமானவர். ஆனால், நாங்கள் தனித்து பயணிப்பதன் நோக்கத்திலேயே செயற்பட்டு வருகின்றோம். 

இந்நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பும் உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உருவாக்கப்பட்ட கட்சி என்பதினால் எமது கொள்கைகளுக்கு இணக்கம் தெரிவித்து எம்முடன் இணைந்து செயற்பட விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைத்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம். 

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சி தொடர்பில் எமக்கு கவலையளித்தாலும், பழைமை வாய்ந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் கிடைக்கவில்லை என்பதினாலேயே மக்கள் அந்த கட்சியை புறக்கணித்துள்ளனர். இதனை கட்சித் தலைவர் இனியாவது புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.

பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை உறுப்புரிமையிலிருந்து நீக்குவதாகவும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளை அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

அந்த உறுப்பினர்கள் அனைவரும் நாட்டு மக்கள் பக்கமே செயற்பட்டுள்ளனர். இது போன்ற செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் மேற்கொண்டு வருமேயானால் ஐக்கிய மக்கள் சக்திக்கும் அதற்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் எமக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad